ஆன்லைனில் ரெயில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா..1 ஆம் தேதி முதல் வரும் புதிய மாற்றம்

  தினத்தந்தி
ஆன்லைனில் ரெயில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா..1 ஆம் தேதி முதல் வரும் புதிய மாற்றம்

புதுடெல்லி, ஆன்லைன் மூலமாக ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களில் பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.இந்திய ரெயில்வே அங்கீகரித்த அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலமாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றாலும், அதிகமான பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி.யையே தேர்வு செய்கின்றனர்.இந்நிலையில், ஆன்லைன் முன்பதிவுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல், ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில், ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குடன் ஆதாரை இணைத்த பயனர்கள் மட்டுமே அதன் வலைத்தளம் அல்லது செயலி மூலம் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை அனைத்து ரெயில்களிலும் அமல்படுத்தப்படுகிறது. இந்த முடிவு, பயணிகளுக்கான முன்பதிவின் நன்மைகள் சரியாக கிடைக்கவும், சிலர் அதை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் முன்பதிவு தொடங்கிய முதல் 10 நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய முடியாது என்ற விதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், இந்திய ரெயில்வேயின் கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு கவுண்டர்களில் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் இல்லை. பொதுப் பயணிகள் ரெயில் டிக்கெட்டுகளை தினமும் நள்ளிரவு 12.20 மணிக்கு தொடங்கி இரவு 11.45 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

மூலக்கதை