“காந்தாரா - சாப்டர் 1”: ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்த பிரபல நடிகர்

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா - சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. பழங்குடியினருக்கும் மன்னருக்குமான நிலவுரிமை பிரச்னைகளைத் தொட்டு கதை உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. காட்சியமைப்புகளும் இசையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் பான் இந்திய மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா - சாப்டர் 1’ மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் மணிகண்டன், ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டப்பிங் கலைஞராகவும் பணியாற்றிய மணிகண்டன் பல நடிகர்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். தற்போது, பான் இந்தியளவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகும் காந்தாராவில் டப்பிங் செய்தது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மணிகண்டன், 'ஜெய்பீம்' படத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றார். இவர் நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், டப்புங் ஆர்ட்டிஸ்ட், துணை இயக்குனர் என பல துறைகளிலும் மணிகண்டன் பணியாற்றி வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த 'குட் நைட்', 'லவ்வர்' மற்றும் 'குடும்பஸ்தன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
மூலக்கதை
