‘பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது’ - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

  தினத்தந்தி
‘பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது’  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. அதேவேளை, ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் அறிவித்துள்ளன. இந்த 3 நாடுகளின் அறிவிப்பிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பயங்கரவாதத்திற்கு இந்த நாடுகள் மகத்தான பரிசை வழங்குவதாக விமர்சித்துள்ளார். அதோடு, ஜோர்டான் நதிக்கு மேற்கில் பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது எனவும் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

மூலக்கதை