இந்தியா, மொராக்கோ இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

ரபாத், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக மொராக்கோ நாட்டிற்கு சென்றுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புத்துறை மந்திரி மொராக்கா நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் தலைநகர் ரபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மொராக்கோவில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் ஒருநாள் இந்தியாவுடன் இணையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தல்டிப் லவ்டியி மற்றும் ராஜ்நாத் சிங் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது இந்தியா, மொராக்கோ இடையே பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான விரிவான செயல்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “மொராக்கோவின் பாதுகாப்புத்துறை மந்திரியுடன் நடைபெற்ற சந்திப்பில், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். மொராக்கோ உடனான இந்தியாவின் உறவுகள் பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருகின்றன. பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மூலக்கதை
