நினைவேந்தல் நிகழ்ச்சி: சார்லி கிர்க் மனைவியின் அருகில் நடனமாடிய டிரம்ப்

  தினத்தந்தி
நினைவேந்தல் நிகழ்ச்சி: சார்லி கிர்க் மனைவியின் அருகில் நடனமாடிய டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர நண்பருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் செப்.10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது 22 வயது இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சார்லி கிர்க்கின் மறைவையொட்டி அரிஸோனா மாகாணத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான அரங்கத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நேற்று (செப். 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வலது சாரியைச் சேர்ந்த 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நினைவேந்தலில் பங்கேற்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டோர் மேடையில் தோன்றி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.அப்போது சார்லி கிர்க்கை குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரத்திற்காக தனது உயிரை தியாகம் செய்து சார்லி தியாகியாகியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அரங்கத்தில் இருக்கும் யாரும் சார்லியை மறக்க முடியாது என்றும் அவர் வரலாறாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.அவரது மனைவி எரிகா கிர்க், தனது கணவரை கொன்றவரை மன்னிப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் அமெரிக்காவின் புகழை பட்டியலிடும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது மேடையில் டிரம்ப் உடன் சார்லி கிர்க் மனைவி, எரிகா கிர்க் உடன் இருந்தார்.பாடலின் வரிகளை முனுமுனுத்தபடியே டிரம்ப், எரிகாவின் அருகில் நின்று நடனமாடினார். முகத்தில் சோகத்துடன் நின்றிருந்த எரிகா, கண்ணீர் சிந்த புன்னகைத்தார். சார்லி கிர்க் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட இந்த விடியோவைப் பகிர்ந்து சிலர் டிரம்ப்பின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மூலக்கதை