இந்தியா - பாக். ஆட்டம் குறித்து கேள்வி எழுப்புவதை நிறுத்துங்கள்.. ஏனெனில் இது... - சூர்யகுமார் யாதவ் கிண்டல்

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் பாகிஸ்தானின் ஆட்டம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியின் நிலை குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “இந்த கேள்விக்கு, நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி பற்றி கேள்விகள் கேட்பதை நீங்கள் அனைவரும் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் என்னைப் பொறுத்தவரை, இரு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி, 7-7 அல்லது 8-7 என்ற கணக்கில் வெற்றி தோல்வி இருந்தால், அதை நல்ல கிரிக்கெட் என்று சொல்லலாம். அதைப் போட்டி என்று அழைக்கலாம். ஆனால், 13-0 அல்லது 10-1 என்று இருந்தால், இது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது இனி ஒரு போட்டியல்ல” என்று கிண்டலாக கூறினார். அவர் கூறுவது போல பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அதில் 12 வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மூலக்கதை
