டி20 கிரிக்கெட்: அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை

  தினத்தந்தி
டி20 கிரிக்கெட்: அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்ஹான் 58 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் இலக்கை நோக்கிய ஆடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு அமர்க்களமாக தொடங்கி வைத்தார். இவர் டி20 கிரிக்கெட்டில் இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அடிப்பது இது 2-வது முறையாகும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இன்னிங்சின் முதல் பந்திலேயே அதிக முறை சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். மற்ற இந்திய வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒரு முறை இன்னிங்சின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்துள்ளனர்.

மூலக்கதை