கரீபியன் பிரீமியர் லீக்: கயானா அணியை வீழ்த்தி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் சாம்பியன்

கயானா, 6 அணிகள் பங்கேற்றிருந்த 13-வது கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக இப்திகார் அகமது 30 ரன்கள் அடித்தார். டிரின்பாகோ தரப்பில் நேத்ராவல்கர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன காலின் முன்ரோ (23 ரன்கள்), அலேக்ஸ் ஹேல்ஸ் (26 ரன்கள்) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொதப்பினர். பூரன் ஒரு ரன்னிலும், பிராவோ 11 ரன்களிலும், ரசல் கோல்டன் டக் ஆகியும் ஏமாற்றினர். இதனால் தடுமாற்றத்திற்குள்ளான அந்த அணியை சுனில் நரைன் (22 ரன்கள்), பொல்லார்டு (21 ரன்கள்) மற்றும் அகீல் ஹொசைன் (16 ரன்கள்) கரை சேர்த்தனர். 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் அடித்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அகீல் ஹொசைன் ஆட்ட நாயகன் விருதையும், பொல்லார்டு தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
மூலக்கதை
