எனக்கு இதுவரை அமைதிக்கான 7 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்: டிரம்ப் ஆதங்கம்

நியூயார்க், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது. இதனால், அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவை தரைமட்டம் ஆக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அரசு முடிவு செய்தது. இதன்படி அவர்கள் ஐரோப்பிய நாடுகள் உள்பட 33 நாடுகளுக்கு சென்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையை விளக்கினர். ஆனால், அமெரிக்காவின் தலையீட்டாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என இந்தியா கூறியது. 3-ம் நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிரம்ப் கூறும்போது, நாங்கள் நிறைய போர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால், இரு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் தீவிர கவனத்தில் கொள்ள கூடியது. உங்களுடன் வர்த்தகம் தொடர வேண்டும் என்றால் நீங்கள் போரை நிறுத்துங்கள் என கூறினேன். வர்த்தக உறவை முன்வைத்து அணு ஆயுத போரை நான் தடுத்து நிறுத்தினேன் என்று கூறி சர்ச்சையை தொடர்ந்து உள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, தாய்லாந்து மற்றும் கம்போடியா, அர்மீனியா மற்றும் அஜர்பைஜான், கொசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் காங்கோ ஆகிய நாடுகள் இடையேயான போர்களையும் நிறுத்தியிருக்கிறோம். வர்த்தக காரணங்களுக்காக, இவற்றில் 60 சதவீதம் பேர் போரை நிறுத்தினர். இதனை நாங்கள் செய்தோம் என்று பெருமையுடன் கூறினார். அதனால், ஒரு போரை நிறுத்தியதற்கு ஒரு நோபல் பரிசு என்றால், எனக்கு இதுவரை அமைதிக்கான 7 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று அவர் ஆதங்கம் வெளியிட்டார். ரஷியா-உக்ரைன் போரை நிறுத்தினால், உங்களுக்கு நிச்சயம் நோபல் பரிசு கிடைக்கும் என என்னிடம் கூறப்பட்டது. ஆனால், அது பெரிய போராக உள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
மூலக்கதை
