பெண் நர்சின் சட்டையை பிடித்து பேனாவை தேடிய... இங்கிலாந்து டாக்டரின் திடுக்கிடும் பாலியல் லீலைகள்

  தினத்தந்தி
பெண் நர்சின் சட்டையை பிடித்து பேனாவை தேடிய... இங்கிலாந்து டாக்டரின் திடுக்கிடும் பாலியல் லீலைகள்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனையில் மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர் அமல் போஸ் (வயது 55). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், 5 ஆண்டுகளாக தனக்கு கீழ் பணியாற்றும் பெண் பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபற்றி பிரெஸ்டன் கிரவுன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. இவருடைய பதவி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றால் பயந்து போய் பலரும் இதனை வெளியே கூற முன் வரவில்லை. பாதிக்கப்பட்ட அனைவரும் புதிதாக வேலைக்கு சேர்ந்த இளம்பெண்கள். அவர்களில் 2 பேர் வேலையை விட்டு சென்று விட்டனர். ஒரு பெண், அவரையே காயப்படுத்தி கொண்டார். இதனால், 5 ஆண்டுகளாக எதிர்ப்பு எதுவுமின்றி டாக்டர் போசின் சீண்டல் தொடர்ந்துள்ளது. அவர், பெண்களின் தோற்றங்களை பார்த்து விமர்சனங்களை வெளியிடுவார். வாட்ஸ்அப் குழுவிலும், பாலுணர்வை தூண்டும் வகையிலான பதிவுகளை வெளியிடுவார். சில பெண்களை கவர்ச்சியாக இருக்கிறாய் என கூறுவார். இதனால், புதிதாக பணிக்கு வருபவர்களிடம், அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்படும் என பெண் ஒருவர் கோர்ட்டில் கூறியுள்ளார். அவர், பெண்களிடம் தற்செயலாக என்றும் நகைச்சுவைக்காக என்றும் கூறி அவர்களுடைய உடலின் இடுப்பு உள்ளிட்ட அந்தரங்க பகுதிகளை தொடுவார் என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. 2017 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் 5 பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார் என போசுக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. இதில் ஒரு பெண் தன்னுடைய வாக்குமூலத்தில், அவருடைய பாலியல் விருப்பத்திற்காக ஒவ்வொரு அந்தரங்க பகுதியையும் தொட்டார். அந்த தருணங்களை நீங்கள் தனியாக அமர்ந்து சிந்தித்து பாருங்கள் என உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அந்த நினைவுகள் இன்னும் வயிற்றை புரட்டுகின்றன என்றார். மற்றொரு பெண்ணோ, இரவில் பயங்கர நினைவுகளுடன் எழுந்து விடுகிறேன் என கூறுகிறார். அந்த வலியை எதிர்கொள்ள முடியாமல், என்னையே காயப்படுத்தி கொள்கிறேன் என்று கூறினார். இந்த மருத்துவமனை நிர்வாகம் என்னை பாதுகாக்க தவறி விட்டது என இன்னொரு பெண் விசாரணையின்போது, குற்றச்சாட்டாக கூறினார். ஒரு முறை போசிடம் கையெழுத்து வாங்க பெண் பணியாளர் சென்றிருக்கிறார். அப்போது, பெண்ணின் சட்டை பகுதியை பிடித்து, அழுத்தியுள்ளார். பின்னர், பேனாவை தேடினேன் என கூறியுள்ளார். இதேபோன்று, லாலிபாப் சாப்பிட்டு கொண்டிருந்த பெண் பணியாளர் ஒருவரிடம், உனக்கு வேறு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன் என கூறியுள்ளார். இதுபோன்று பல்வேறு பெண்களிடம் ஆபாசத்துடன் பேசியுள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆனால், ஒரு விளையாட்டாகவே இதனை செய்தேன் என போஸ் விசாரணையில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி இயான் அன்ஸ்வொர்த், பாதிக்கப்பட்டவர்களை பற்றிய எந்த வருத்தமோ, அதுபற்றிய உணர்வோ போசுக்கு இல்லை. உங்களுடைய பதவியை பயன்படுத்தி, பல பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல்களை செய்து இருக்கிறீர்கள் என கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மூலக்கதை