பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகும் கங்குலி

  தினத்தந்தி
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகும் கங்குலி

கொல்கத்தா, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. பப்லு கோலே (செயலாளர்), மதன் மோகன் கோஷ் (இணைச் செயலாளர்), சஞ்சய் தாஸ் (பொருளாளர்), அனு தத்தா (துணைத் தலைவர்) ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். 53 வயதான கங்குலி ஏற்கனவே பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தாலும் இந்த முறை பல சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. ரஞ்சி கிரிக்கெட்டில் அந்த அணியின் செயல்பாடு தொடர்ந்து மந்தமாக இருந்து வருகிறது. இதே போல் சமீபத்தில் சங்கத்தில் நிதிமுறைகேடு புகார் வெடித்தது. நிதி முறைகேடு மற்றும் பதவியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய இணைச் செயலாளர் தேபப்ரதா தாஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். நிதி கமிட்டி உறுப்பினர் சுப்ரதா சஹாவுக்கு ரூ.2 லட்சம் அபராதத்துடன், துணை கமிட்டியின் நடவடிக்கைகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டது. இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் சரி செய்து பெங்கால் சங்கத்தின் புகழை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் இந்த பொறுப்பை அவர் ஏற்க இருக்கிறார்.

மூலக்கதை