முஸ்தாபிஜூர், தஸ்கின் பந்து வீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றியது - லிட்டான் தாஸ் பேட்டி

துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தது. இதில் இலங்கை நிர்ணயித்த 169 ரன் இலக்கை வங்காளதேச அணி சைப் ஹசன் (61 ரன்), தவ்ஹித் ஹிரிடாய் (58 ரன்) ஆகியோரது அரைசதத்தின் உதவியுடன் 19.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. வெற்றிக்கு பிறகு வங்காளதேச கேப்டன் லிட்டான் தாஸ் கூறியதாவது, ஆசிய கோப்பைக்கு முன்பாக நாங்கள் சில தொடர்களில் இலக்கை விரட்டிப் பிடித்திருப்பதால், எங்களால் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்பது தெரியும். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது. அவர்கள் ஒரு கட்டத்தில் 190 ரன்கள் வரை சேர்ப்பார்கள் என்று தோன்றியது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிஜூர் ரகுமானும் (19-வது ஓவரில் 5 ரன்), தஸ்கின் அகமதுவும் (20-வது ஓவரில் 10 ரன்) முறையே 19-வது மற்றும் 20-வது ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தின் போக்கை எங்கள் பக்கம் திருப்பினர். சைப் ஹசன் இங்குள்ள ஆடுகளங்களில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார் என்பது தெரியும். இதுபோன்ற ஆட்டங்களில் இலக்கை வெற்றிகரமாக துரத்திபிடிக்கும் போது, அது அடுத்த ஆட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
