இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் மிதுன் மன்ஹாஸ்

  தினத்தந்தி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் மிதுன் மன்ஹாஸ்

மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவராக இருந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னிக்கு கடந்த ஜூலை 19-ந்தேதி 70 வயது நிறைவடைந்தது. கிரிக்கெட் வாரிய விதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் நிர்வாக பொறுப்பில் நீடிக்க முடியாது என்பதால் அவர் கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக தலைவராக செயல்பட்டார். அதிகாரமிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு சச்சின் தெண்டுல்கர், கங்குலி, ஹர்பஜன்சிங் இப்படி பிரபலமான பல முன்னாள் வீரர்கள் பெயர்கள் அடிபட்ட நிலையில், திடீர் திருப்பமாக மிதுன் மன்ஹாஸ் என்ற முன்னாள் முதல்தர வீரரை புதிய தலைவராக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 45 வயதான மிதுன் மன்ஹாஸ், ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. என்றாலும் முதல்தர கிரிக்கெட்டில் நன்கு அறியப்பட்டவர். உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக நீண்ட காலம் விளையாடி இருக்கிறார். கேப்டனாகவும் பணியாற்றி இருக்கிறார். அவரது கேப்டன்ஷிப்பில் உள்ளூர் கிரிக்கெட்டில் விராட் கோலி ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்தர கிரிக்கெட்டில் 157 ஆட்டங்களில் ஆடி 27 சதம் உள்பட 9.714 ரன்கள் குவித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் (இப்போது இந்த அணி இல்லை), டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடிய அவர் 55 ஆட்டங்களில் 514 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர ஐ.பி.எல்.-ல் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு உதவி பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிர்வாகியாகவும் உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று மிதுன் மன்ஹாஸ் மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பி.சி.சி.ஐ.-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இதில் புதிய தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். பொருளாளராக, முன்னாள் டெஸ்ட் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவருமான ரகுராம் பாத் நியமிக்கப்படுகிறார். செயலாளராக தேவஜித் சைக்யா தொடருவார்.

மூலக்கதை