வால்பாறை அருகே காட்டுப்பகுதியில் திடீர் தீ; மரங்கள் எரிந்து நாசம்

  தினத்தந்தி
வால்பாறை அருகே காட்டுப்பகுதியில் திடீர் தீ; மரங்கள் எரிந்து நாசம்

கோவை, கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரவு நேரத்தில் குளிர், பனிப்பொழிவு, பனிமூட்டம் நிலவி வந்தாலும் அதிகாலை முதல் மதியம் 2 மணி வரை வெயில் வாட்டி எடுக்கிறது. இதனால் வனப்பகுதிகள், தனியாருக்கு சொந்தமான காடுகளில் உள்ள செடி, கொடி மற்றும் புற்கள் காய்ந்து போய் உள்ளன. அதன்படி ரொட்டிக்கடை அடுத்த பாறைமேடு பகுதியில் உள்ள காடுகளில் இருக்கும் செடி-கொடி, புற்கள் வெயிலுக்கு காய்ந்து கிடந்தன. இந்தநிலையில் நேற்று காலை பாறைமேட்டில் காட்டுப்பகுதியின் ஒரு இடத்தில் உள்ள காய்ந்த புற்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து பலத்த காற்றுக்கு தீ ஏக்கர் கணக்கில் மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதன்படி பாறைமேடு பகுதியில் இருந்து லோயர்பாரளை எஸ்டேட் மற்றும் தேன்மலை குறுக்கு பகுதிகள் வரை உள்ள காடுகளில் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த வால்பாறை வனத்துறையினர், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக அருகில் உள்ள வனப்பகுதிக்கு தீ பரவாமல் இருக்க அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். சுமார் 4 ஏக்கர் வரை தீப்பிடித்து உள்ளதால் உடனே அணைக்க முடியவில்லை. இந்த தீயில் 4 ஏக்கர் வரையிலான பல்வேறு செடி-கொடி, மரங்கள் எரிந்து சாம்பலாகின. வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பாறைமேடு பகுதி வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அல்லது உள்ளூர் மக்கள் புகைப்பிடித்துவிட்டு காட்டுப்பகுதியில் வீசியதே தீவிபத்துக்கு காரணம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை