திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

  தினத்தந்தி
திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி, திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் நேற்று முதல் அதிகரித்து காணப்பட்டது. 3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் நாளை நடைபெறும் மினி பிரமோற்சவம் எனும் ரத சப்தமியில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பப்படும் காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் தரிசனத்திற்காக 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர். திருப்பதியில் கடும் குளிர் வீசுவதால் வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். திருப்பதியில் நேற்று 69,726 பேர் தரிசனம் செய்தனர். 27,832 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மூலக்கதை