திருமணமான 2 ஆண்டுகளில் சோகம்.. பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை - 3 பேர் மீது பாய்ந்த வழக்கு

  தினத்தந்தி
திருமணமான 2 ஆண்டுகளில் சோகம்.. பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை  3 பேர் மீது பாய்ந்த வழக்கு

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் கல்பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் அனில். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சிந்து (வயது25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த18-ந்தேதி வீட்டில் இருந்த சிந்து திடீரென விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சிந்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சிந்துவின் தந்தை சுரேஷ்குமார் புதுக்கடை போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். இதுதொடர்பான அந்த மனுவில், “எனது மகள் சிந்துவுக்கும், அனிலுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவரது மாமியார் மற்றும் கணவரின் சகோதரர் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால், மனவருத்தத்தில் இருந்து வந்த எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் சிந்துவின் கணவர் அனில், அவரது தாயார் கலா, அனிலின் சகோதரர் அனு ஆகியோர் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சிந்துவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மூலக்கதை