ஆப்கானிஸ்தான்: பஸ் விபத்தில் 79 அகதிகள் தீயில் கருகி பலி

காபூல், 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அறிவித்தது. இதனால் தலீபான்கள் கை ஓங்கியது. நிலைமை மோசமானதால் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். மீண்டும் அங்கு தலீபான்கள் ஆட்சி அமைந்து 5 ஆண்டுகளாக நீடிக்கிறது. தலீபான்களின் கிடுக்கிப்பிடி ஆட்சி அதிகாரத்துக்கு பயந்து மக்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான், துருக்கி, அரபு அமீரகத்துக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் அந்த நாடுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகள் தடாலடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய குடியிருப்புகள் நொறுக்கப்பட்டு குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதனைபோல ஈரானில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் பஸ் மூலமாக நேற்று நாடு கடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெரத் அருகே அந்த பஸ் வந்து கொண்டிருந்தது. அதிகாலையில் வந்தநிலையில் பஸ் டிரைவர் கண் அசந்து தூங்கியதாக தெரிகிறது. இதனால் முன்னால் சென்ற லாரி மீது பின்பக்கமாக பஸ் மோதி விபத்திற்குள்ளானது. மோதிய வேகத்தில் சாலையில் சரிந்து விழுந்து பஸ் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பற்றி எரிந்த பஸ்சில் இருந்து வெளியேற முடியாமல் அகதிகள் தவித்தனர். கண்இமைக்கும் நேரத்தில் பஸ் தீக்கிரையானதில் சிக்கி 19 குழந்தைகள் உள்பட 79 அகதிகளும் சம்பவ இடத்திலேயே கருகி செத்தனர்.
மூலக்கதை
