அரசியல் எதிரிகளை பழிவாங்கவே 130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்; செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவியிலிருந்து அகற்றுவது என மத்திய அரசு, 130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வருவது அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது. இதுவரை பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசமைப்பு சட்டத்திருத்தங்கள் அனைத்தும் அவர்களுக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் பா.ஜ.க. அரசு, இதனை பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, அவசரகதியில் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத்திருத்தத்தை உடனடியாக கைவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, 3 முக்கிய மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆகியவற்றை அவர் இன்று தாக்கல் செய்து உள்ளார்.
மூலக்கதை
