மாணவர்களின் பன்முகத்திறனை ஊக்குவிக்கும் கலைப்பட்டறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

சென்னை, சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களோடு அவர்களின் பன்முகத்திறன் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில், கலைத்திறன்கள் வாயிலாக மாணவர்களின் சிந்தனைகளை செம்மையாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்துவதற்காக கலைப்பட்டறையை தொடங்கி வைத்தார். இதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:- “தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் போதைப் பொருட்கள் இல்லாத ஒரு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. துணை முதலமைச்சரின் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கடந்த வாரம் திருச்சி மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து உறுதிமொழியை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கோடியே 13 லட்சம் பொதுமக்களை சென்றடையும் அளவிற்கு ஒரு லட்சத்து அறுபத்தாறாயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 13,903 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் போதை எதிர்ப்பு மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மன்றங்களில் உள்ள மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் ஓவியப் போட்டிகள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்ந்த புத்தாக்க பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றனர். மாணவர்களின் வாழ்வியல் திறன்கள் சார்ந்த பயிற்சியும், போதைப் பொருள் சார்ந்த பயன்பாட்டினால் ஏற்படும் உடல்நலக்கேடு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு சார்ந்து மருத்துவ வல்லுநர்களாலும் சிறப்பு கருத்தரங்கங்களில் பங்கேற்றும், அதனடிப்படையில் ஓவியத்தின் வாயிலாகவும் சுவரொட்டிகளின் மூலம் போதை தடுப்பு சார்ந்த சுய விழிப்புணர்வு மற்றும் மாணவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் பயிற்சி அளிக்கப்பட்டு மாணவர்களிடையே போதை எதிர்ப்பு மற்றும் வலுவூட்டும் பட்டறையாகவும் இக்கலை பட்டறை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இக்கலைப் பட்டறைக்கு அடிப்படையாக 19.08.2025 அன்று போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கத் தேவையான வாழ்வியல் திறன்கள் குறித்த அறிமுக அமர்வில் 50 ஆசிரியர்களும் 90 மாணவர்களுமாக மொத்தம் 140 நபர்கள் பங்கேற்றனர். போதைப்பொருள் எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் குறித்த பயிற்சியினை கருத்தாளர்களாக மருத்துவர் வெங்கடேஷ் மதன்குமார், டி.கார்த்திகேயன், சரவணகுமார் ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓவிய வல்லுநர்களின் உதவியுடன், மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் சுவரொட்டிகளை (Posters) உருவாக்குவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இக்கலைப்பட்டறையினை அடிப்படையாகக் கொண்டு அனைத்து பள்ளிகளிலுள்ள போதை எதிர்ப்பு மன்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாவட்டத்திலுள்ள முதன்மை பயிற்றுநர்களுக்கும் பயிற்சி வழங்கி மாணவர்களுக்கு கலைப்பட்டறை செயல்பாடுகள் செயல்படுத்தப்படும். வாழ்வியல் திறன் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசால் ரூபாய் 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாணவச் செல்வங்கள் இந்த வயதில் இருந்து மற்றவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வினை எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல உள்ளங்களாக இருக்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு செல்கின்ற வகையில் பத்திரிகை ஊடகத்துறையினரும் ஈடுபடும்போது இது மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தி போதை பொருட்கள் இல்லாத ஒரு தமிழகத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை நிறைவேற்றிக் காட்டுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலக்கதை
