போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்

சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருவதற்கு காரணம் அரசின் அலட்சியப்போக்கே. கடந்த 2023 ஜூலை முதல் 2025 ஜூலை வரையிலான காலங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணித்தொகை, விடுப்பு சரண்டர் ஈட்டுத்தொகை, ஒப்பளிப்புத் தொகை ஆகியவை ஓய்வு பெறும் நிலையிலேயே வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு அப்படி வழங்காமல் கடந்த 2024 ஏப்ரல் வரையிலான காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.1137,97,00,000/- (ஒரு ஆயிரத்து நூற்று முப்பத்தேழு கோடி தொன்னூற்று ஏழு லட்சம்) மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தது. இதனால் கடந்த மே 2024 முதல் ஜூலை 2025 வரையிலான ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய உரிமைத் தொகை கிடைக்கப்பெறாமல் போராட்டக்களத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் அகவிலைப்படி உயர்வுகள் சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவு பெற்ற நிலையிலும் முழு அளவிலான அகவிலைப்படி உயர்வுகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக தமிழக தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உரிமைத்தொகைக்காக, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக ஓய்வூதியர்கள் போராடும் போதெல்லாம் அவர்களை கைது செய்வது, பின்னர் விடுவிப்பது, கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் நேற்றைய தினம் கூட அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்காக நியாயமாக போராடிய போது கைது செய்ததும் நியாயமில்லை. இச்சூழலில் இந்தப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்று போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் குறை கூறுகின்றனர். எனவே தமிழக அரசு தேர்தல் நேர வாக்குறுதியையும், அரசுப் போகுவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களின் பணிக்காலத்தையும், உழைப்பையும், போராட்டங்களையும் கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
