‘ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது’ - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை, நாடு முழுவதும் நாய்க்கடி பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தலைநகர் டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கவும், கருத்தடை ஊசி போடவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சுமார் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாகவும், 2024-ம் ஆண்டில் மட்டும் 14,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த கருணாகரன்(வயது 48) என்பவரை, பக்கத்து வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தடுக்க முயன்ற நாயின் உரிமையாளர் பூங்கொடிக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வளர்ப்பு நாய்களை வைத்திருப்போருக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கக் கூடாது என்றும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிமம் பெற்ற, நோய் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும்போது ஒரே நேரத்தில் ஒரு செல்ல பிராணியை மட்டுமே உரிமையாளர் கொண்டு வர வேண்டும் என்றும், பொது இடங்களில் கழுத்துப்பட்டை, முகமூடி அணியாமல் நாய்களை கொண்டு வரக்கூடாது என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூலக்கதை
