மத்திய மந்திரி அமித்ஷா நாளை நெல்லை வருகை.. ஹெலிகாப்டர் தரையிறக்கும் இடம் திடீர் மாற்றம்

  தினத்தந்தி
மத்திய மந்திரி அமித்ஷா நாளை நெல்லை வருகை.. ஹெலிகாப்டர் தரையிறக்கும் இடம் திடீர் மாற்றம்

தமிழக பா.ஜனதா சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான ‘பூத் கமிட்டி' மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தச்சநல்லூரில் நடக்கிறது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அவர் நாளை நெல்லை வருகிறார். இதனால் மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலமாகவும், மோப்பநாய் மூலமாகவும் போலீசார் சோதனை செய்தனர். இந்த நிலையில் அமித்ஷா பயணிக்கும் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள கல்லூரியில் ஹெலிபேடு (தரையிறங்கு தளம்) அமைக்கப்பட்டிருந்தது. அமித்ஷா மற்றும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வீரர்கள் பயணிக்கும் 3 ஹெலிகாப்டர்கள் டெல்லியில் இருந்து வருகின்றன. அவை மூன்றையும் ஒரே நேரத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கான ஒத்திகை நடந்தது. ஆனால் அந்த பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்குவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டது. அதாவது, அந்த பகுதியில் மரங்கள் நிறைய இருக்கிறது. 3 ஹெலிகாப்டர்களையும் ஒரே நேரத்தில் தரையிறக்குவதற்கான சூழல் இல்லை. இதனால் ஒத்திகைக்காக கொண்டுவரப்பட்ட ஹெலிகாப்டர் நீண்டநேரம் வானில் வட்டமிட்டபடியே இருந்தது. பின்னர் தரையிறங்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. எனவே இந்த ஹெலிபேடுக்கு மத்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்புபடை வீரர்களும், நெல்லை மாநகர போலீசாரும் இணைந்து மாற்று இடத்தை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானம் அல்லது மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதிய ஹெலிபேடு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மூலக்கதை