புதிதாக கட்சி தொடங்குபவருக்கும்... தவெக மீது எடப்பாடி பழனிசாமி மறைமுக விமர்சனம்

ராணிப்பேட்டை,ராணிப்பேட்டை, சோளிங்கர் தொகுதிகளில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் அரக்கோணம் காந்தி சாலையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார். போட்டோ ஷூட் எடுப்பார். மக்களை ஏமாற்றுவதில் திமுக அரசு சாதனை படைத்துள்ளது. திமுக குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அதிமுக மக்களுக்காக பாடுபடும் இயக்கம். இதுதான் வித்தியாசம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது இயக்கத்தை உடைக்க சதித் திட்டம் தீட்டியும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. சில சுயநலவாதிகள் நம் ஆட்சியை கவிழ்க்க எதிரியோடு இணைந்து பணியாற்றினார்கள். அதையும் முறியடித்தோம். தி.மு.க.வின் சூழ்ச்சியை மக்கள் ஆதரவோடு தவிடுபொடியாக்கினோம். இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் அதிமுக தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி நமது தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனர். வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற நல்லாதரவை தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
