உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது வரி; சொல்கிறது அமெரிக்கா

  தினத்தந்தி
உக்ரைன்  ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது வரி; சொல்கிறது அமெரிக்கா

வாஷிங்டன்,உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 273வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேவேளை, வெளிநாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு உக்ரைன் போரை ரஷியா நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால், ரஷியாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது வரி விதித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் கூறுகையில், சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி டிரம்ப் பொதுவெளியில் அதிக அழுத்தம் கொடுக்கிறார். இந்தியா மீது வரி உள்பட டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கின்றீர்கள். உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வரவேண்டும் என டிரம்ப் உறுதியாக நினைக்கிறார் என்றார்.

மூலக்கதை