சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணி - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  தினத்தந்தி
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணி  உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை மேற்கொள்ளும் இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக உருவாக்கி வருகிறார். விளையாட்டு போட்டிகளை பார்வையிடும் பார்வையாளராக இல்லாமல், அனைவரும் போட்டிகளில் பங்கேற்க செய்வதற்காக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – 2025 நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலமாக பதிவுகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in வாயிலாக தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்ய கடைசி நாள் 20.8.2025 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் அதனுடைய தலைவரும் சர்வதேச மோட்டார் பந்தய வீராங்கனையுமான செல்வி நிவேதா ஜெசிக்கா தலைமையில் இன்று (15.8.2025) சென்னையிலிருந்து புறப்பட்டு தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் இராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்து மீண்டும் 17.8.2025 காலை புறப்பட்டு அன்று இரவே சென்னை வந்தடைகின்றனர். தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.8.2025) முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை