முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேட்டி

  தினத்தந்தி
முதல்அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேட்டி

சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள் உள்பட 950 பேரை 30 மாநகர பஸ் மூலம் போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி, தாம்பரம் உள்பட 12 மண்டபம் மற்றும் சமூக நலக்கூடங்களில் அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் எங்களின் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம், உள்பட 6 புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் நலன் காக்கும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக தூய்மைப் பணியாளர்கள் சிலர் பேட்டி அளித்துள்ளனர். தூய்மைப் பணியாளர் மோகனசிந்து பேட்டி:- காலை உணவு தந்த முதல்வருக்கு வயிறார பசியை தீர்த்ததற்காக ரொம்ப நன்றி. இந்த நிறுவனத்திற்கு நான் எதற்கு வேலைக்கு வந்தேன் என்றால் நிறைய நலத்திட்ட உதவிகளும், எங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான எல்லாமே இதுல இருக்கு. நாங்க காலைல டீ கூட குடிக்காம வீட்டுல இருந்து வந்துடுவோம். ஆனால் இந்த வேலைல காலைல உணவு கொடுத்து, வயிறார பசியாற எங்கள வேலை செய்ய சொல்லிருக்காங்க. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா. அதுமட்டுமில்லாமல் மாத மாதம் வாடகை கட்ட முடியாமல் ரொம்ப அவதிப்படுறோம் நாங்க. எங்களுடைய முதல்வருக்கு எல்லாத்துக்காகவும் முதல்ல நன்றி கடன் தெரிவிக்கிறோம். வாடகை கட்ட முடியாம ஒவ்வொரு மாதமும், 5000, 6000 ரூபாய் ஒவ்வொரு வருஷத்திற்கும் ஒவ்வொரு முறை வாடகைகாரர்கள் 1000, 2000 ரூபாய் ஏத்திக்கிட்டே இருக்காங்க. எங்களால வாடகை கட்ட முடியாம அவஸ்தைப்படுறோம். ஆனால் இந்த திட்டத்தில் எங்களுக்கு வீடு தராங்க. எங்களுக்கு கடன் நிறைய இடத்துல லோன் வாங்கிருக்கிறோம். அந்த லோன 6% தள்ளுபடி பண்ணிருக்கிறாங்க. அதுக்காக ரொம்ப ரொம்ப நன்றியைத் தெரிவிக்கிறோம். இந்த நிறுவனத்துக்கு வேலைக்கு வந்ததுக்காக நாங்க ரொம்ப பெருமைப்படுறோம். நன்றி. தூய்மைப் பணியாளர் காத்ரின் மேரி பேட்டி:- பள்ளியில படிக்கிற மாணவர்களுக்கு கல்வி உதவிக்காக நிறைய நலத்திட்டங்கள் தரேன்னு சொல்லிருக்கிறாரு. அதுமட்டுமில்லாத மருத்துவத்துல எங்களுக்கு உடல்நலம் எதுக்குமே எங்களுக்கு கியாரண்டி கிடையாது. ஆனால் இப்ப மருத்துவம் மூலமாக எங்களுக்கு நிறைய சேப்டி, நிறைய உதவி செய்யுறாரு. கடன்கள் தராரு. கல்வி உதவித் தொகை தராரு, மானியம் மூலமாக நிறைய உதவி செய்யுறேன்னு சொல்லிருக்கிறாரு. வீடு கட்டித் தரேன்னுருக்கிறாங்க, வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி தரேன்னு சொல்லிருக்கிறாங்க. நிறைய நலத்திட்டங்கள் மகளிர் உரிமைத் தொகையில இருந்து இலவச பஸ்ல இருந்து இன்னும் மகளிருக்கு நிறைய செஞ்சிருக்கிறாரு. முதல்வர் அவர்களுக்கு நன்றி. தூய்மைப் பணியாளர் பரமேஸ்வரி பேட்டி:- காலை உணவும் எங்களுக்கு செஞ்சி தருவதாக சொல்லியிருக்காரு. அதுக்கு அடுத்து கல்வி உதவி கண்டிப்பா செஞ்சித் தறேன் சொல்லியிருக்காரு. எங்க வீட்ல இருக்குற ஊனமுற்ற குழந்தைகளுக்காக அதுக்கும் இந்த திட்டத்தில் இருந்து 1500 ரூபாய் வழங்கப்படும் சொல்லிட்டு கலெக்டர்க்கு ஆர்டர் கொடுத்து இருக்காரு இந்த ஐயா. எங்களுக்கு வீடு கட்டிக்கொடுக்குறேன் அப்புறம் எங்களுக்கு காலையில சாப்பாடு உணவு. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எல்லாம் கொடுத்துயிருக்காரு, அதே மாதிரி எங்களுக்கு இஎஸ்ஐ கார்டு வழங்கியிருக்காரு. எங்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. இதெல்லாம் இவ்வளவு நாள் இல்லாம இருந்தது இனிமேல் எங்களுக்கு குடுக்குறேன்னு சொல்லியிருக்காரு. முதலமைச்சர் அய்யாவுக்கு நன்றி தூய்மைப் பணியாளர் மணிமேகலை பேட்டி:- முதலமைச்சர் ஐயா எங்களுக்கு நல்லா உதவி பண்ணுறாங்க இதை நாங்க மறக்கவும் மாட்டோம். சாமி அவங்க வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டிக்கூடுக்கறாங்க கணவன் இல்லாத நான் வீட்டு வாடகை மாசம் ஆன 7 ஆயிரம் 8 ஆயிரம்ன்னு ஆகுது இரண்டு ஆம்பள பசங்க எனக்கு. பெருக்கி தான் காச வாங்கி வச்சிக்கிட்டு வாழ்றேன். எங்களுக்கு வீடு கட்டி தறேன்னு சொன்ன சாமி அவங்க அவங்களை கோவில் கட்டிக் கும்புடுவேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐயா நூறு வருஷம் நல்லா வாழனும் என்று வாழ்த்துறோம் என்று தெரிவித்தார்.

மூலக்கதை