சுதந்திர தின விழா; முதுமலை காப்பகத்தில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்

  தினத்தந்தி
சுதந்திர தின விழா; முதுமலை காப்பகத்தில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்

நீலகிரி, இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்-அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர். அந்த வகையில் முதுமலை காப்பகத்தில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் என இரு முகாம்களில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது யானைகளோடு தேசியக் கொடி ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் 29 யானைகள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டன. முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் வித்யா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது யானைகள் தும்பிக்கையை தூக்கி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. இதனை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

மூலக்கதை