தூய்மை பணியாளர்களின் பிரச்சனையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க முயற்சி - திருமாவளவன்

மதுரை, விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”தூய்மைப் பணியாளர்களின் பிரச்னையில் ஆரம்பத்தில் இருந்தே விசிக குரல் கொடுத்து வருகிறது. தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்ப நடைமுறை. அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட தி.மு.க. கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம். தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஏற்கெனவே அ.தி.மு.க. ஆட்சியில் 11 மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் 4 மண்டலங்கள் உள்ளன. அதில் 2 மண்டலங்களை தனியார் மயமாக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும். தூய்மை பணியாளர்களின் பிரச்சனையை வைத்து சிலர் திமுக கூட்டணியை உடைக்க பார்க்கிறார்கள். ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கை விட வேண்டும். தேர்தலுக்காக செய்தாலும் மக்களுக்கு பயன்தரும் என்பதால் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம். சுதந்திர தின விழாவில் ஆர்எஸ்எஸ்-ஐ பிரதமர் பாராட்டி பேசியுள்ளது ஏற்புடையதல்ல.” இவ்வாறு அவர் பேசினார்.
மூலக்கதை
