அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்

  தினத்தந்தி
அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நிகழாண்டு 207 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. நான்காண்டு கால திராவிட மாடல் விளம்பர ஆட்சியில் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, தரத்தை உயர்த்த தவறிய திமுக அரசின் அலட்சியப்போக்குதான், 207 அரசுப்பள்ளிகள் ஒரே ஆண்டில் மூடும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதற்கான முதன்மைக் காரணமாகும். நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலும் இல்லாத காரணத்தால் நீலகிரி மாவட்டத்தில் 17 பள்ளிகளும், சிவகங்கை மாவட்டத்தில் 16 பள்ளிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 12 பள்ளிகளும், சென்னை, ஈரோடு, மதுரை மாவட்டங்களில் தலா 10 பள்ளிகளும், கோவை ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 9, தூத்துக்குடி 8, தர்மபுரி - திருப்பூர் மாவட்டங்களில் தலா 7, விருதுநகர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 5, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலா 4, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, இராணிபேட்டை, தேனி மாவட்டங்களில் தலா 3, தேனி, கடலூர், தென்காசி, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 2, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 1 என தமிழ்நாடு முழுவதும் 207 அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாகத் தொடக்கக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் புதிதாக 12,000 பள்ளிகளையும் திறந்து, மதிய உணவளித்து, இடைநின்ற தமிழ்நாட்டுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களின் கல்விக்கண்ணைத் திறந்தார். ஆனால், திமுக அரசு காலை உணவுத்திட்டம் தொடங்கிய பிறகு, தமிழ்நாடு முழுவதும் 207 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர்கூடச் சேர்க்கை நடைபெறாமல் மூடப்படுகிறது என்றால் அது தனியாரிடம் கையளிக்கப்பட்ட காலை உணவுத்திட்டத்தின் தோல்வியா? அல்லது திமுக அரசின் கையாலாகத்தனமா? என்ற கேள்வி எழுகிறது. தனியார்ப் பள்ளிகளால் தரமுடிந்த தரமான கல்வியைத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அரசுப்பள்ளிகளில் ஏன் தரமுடியவில்லை? திமுக அரசு காலை உணவுத்திட்டத்தைத் தொடங்கிய பிறகும் அரசுப்பள்ளிகளில் மாணவர் வருகை குறைகின்றது. மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டு, மாதம் 1000 ரூபாய் வழங்கியும் அரசுக்கல்லூரிகளில் மாணவ - மாணவியர் சேர்க்கை குறைகிறது என்றால் அது திமுக அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியேயாகும். ஒரு நல்ல அரசின் கடமை மாணவச்செல்வங்களுக்குத் தரமான கல்வியைத் தருவதே அன்றி பணத்தைக் கொடுப்பதல்ல; தரமான கல்வியும், அதற்கேற்ற வேலையும் வழங்கினால் எதிர்காலத்தில் எத்தனை ஆயிரங்களை வேண்டுமானாலும் எம் தலைமுறை பிள்ளைகளால் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனால், அரசுப்பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, உரிய ஊதியம் வழங்காமல் ஆசிரியர் பெருமக்களை வீதியில் போராட வைத்து ஏழைக் குழந்தைகளின் கல்வியை முடக்கியது, உட்கட்டமைப்பை மேம்படுத்தாததால் இடிந்து விழும் பள்ளி மேற்கூரைகள், அதனைச் சீரமைக்க தனியாரிடம் அரசே கையேந்தி நிற்கும் அவலம், அரசுப்பள்ளிகளில் கஞ்சா, மது உள்ளிட்ட பெருகி வரும் போதைப்பொருள் புழக்கம், அரசுப்பள்ளிச் சிறுமிகளுக்கு அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகள், அரசுக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாதது, கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாததுடன், ஊதிய உயர்வு வழங்க மறுப்பது ஆகிய நிர்வாகச் சீர்கேடுகள்தான் அரசுப்பள்ளி - கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலும் குறைந்ததற்கான அடிப்படைக் காரணமாகும். மக்களின் அடிப்படைத் தேவையான தரமான கல்வியையும், மருத்துவத்தையும் தரத் திறனற்ற திமுக அரசு, வளர்ச்சி, முன்னேற்றம் என்று பேசுவது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளை தரமற்றதாக்கிவிட்டு, கியூப நாட்டை காக்கப்போவதாக தமிழ்நாட்டு முதலமைச்சர் கூறுவது வேடிக்கையானது. கியூபாவில் கல்வியும், மருத்துவமும் இப்படித்தான் கூறு கட்டி விற்கப்படுகிறதா? அரசுப்பள்ளிகள் மூடப்படும் அவலம் நடைபெறுகிறதா? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலுண்டு? ஆகவே, தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட 207 அரசுப்பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளின் கல்வியின் தரத்தையும், உட்கட்டமைப்பையும் மேம்படுத்தி மாணவர் வருகையை அதிகப்படுத்த வேண்டுமெனவும், இனி வருங்காலத்தில் அரசுப்பள்ளிகள் மூடப்படாமல் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மூலக்கதை