அபுதாபி: சாலை விபத்தில் இந்திய தம்பதி பலி; உயிர் தப்பிய 3 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு

  தினத்தந்தி
அபுதாபி: சாலை விபத்தில் இந்திய தம்பதி பலி; உயிர் தப்பிய 3 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு

அபுதாபி, ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சையத் வாஹீத் (வயது 35). பொறியாளரான இவர் தனது மனைவி சனா பேகம் (27) மற்றும் 3 குழந்தைகளுடன் அபுதாபி அல் ருவைஸ் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் குடும்பத்துடன் சையத் வாஹீத் தனது மனைவியின் தம்பியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்று இருந்தார். மீண்டும் அனைவரும் கடந்த ஜூலை 24-ந் தேதி அபுதாபி வந்தனர். சையத் மற்றும் சனா ஆகியோர் அமீரகத்தை தங்கள் சொந்த ஊராக கருதி 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் குடும்பத்துடன் அபுதாபியில் வசிக்கும் மனைவியின் மற்றொரு தம்பி வீட்டிற்கு சென்று விட்டு, தான் வசிக்கும் அல் ருவைஸ் பகுதிக்கு சையத் காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி பிறகு அருகில் இருந்த இரும்பு தூணில் தூக்கி எறியப்பட்டு நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சிக்கி சையத் மற்றும் சனா ஆகியோர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வயது ஆண் குழந்தை, பெண் குழந்தைகளான சாதியா (வயது 2) மற்றும் சித்ரா பேகம் (வயது 7) ஆகியோரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, பலியான தம்பதியின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. இந்த நிலையில் சனாவின் தந்தை இஸ்மாயில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள அபுதாபி வந்துள்ளார். அவர், பெற்றோர் இறந்தது கூட தெரியாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மூலக்கதை