இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கியாஸ் சிலிண்டர், குடிநீர், பத்திரிகைகள் ரத்து; பாகிஸ்தான் அடாவடித்தனம்

கராச்சி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது. பாகிஸ்தானின் கொத்லி, பஹவல்பூர், முரித்கே, பாக் மற்றும் முசாபராபாத் ஆகிய நகரங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளிவரும் ஊடக செய்தி தெரிவித்தது. இந்த சூழலில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் வீடுகளுக்கான கியாஸ் சப்ளையை அந்நாட்டு அரசு நிறுத்தி உள்ளது. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை விற்க கூடாது என கியாஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்களையும் அறிவுறுத்தி உள்ளது. இதேபோன்று குடிநீர் மற்றும் பத்திரிகைகளையும் அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. வகுத்து கொடுத்த திட்டத்தின்படி இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கான பத்திரிகைகளை இந்தியாவும் நிறுத்தி வைத்து உள்ளது. 2019-ம் ஆண்டில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா வான்வழி தாக்குதலை நடத்தியபோதும், இந்திய தூதரக அதிகாரிகள் இதேபோன்று துன்புறுத்தப்பட்டனர். பாகிஸ்தானின் இந்த முடிவானது, தூதரக உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்த (1961) விதிமீறலாகும். இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 25-ன்படி, தூதரக இயக்கம் நல்ல முறையில் செயல்பட அனைத்து வசதிகளையும் அந்த நாடு வழங்க வேண்டும்.
மூலக்கதை
