உக்ரைன் அதிபர் இன்று ஜெர்மனி பயணம் - காரணம் என்ன?

  தினத்தந்தி
உக்ரைன் அதிபர் இன்று ஜெர்மனி பயணம்  காரணம் என்ன?

கீவ்,உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 266வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷிய அதிபர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் முக்கிய முடிவு எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய அதிபருடனான சந்திப்பிற்குமுன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி இன்று காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று ஜெர்மனி செல்கிறார். ஜெர்மனி அதிபர் பில்ட்ரிட்ச் மெர்சை உக்ரைன் அதிபர் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது ரஷியாவுக்கு எதிரான போரில் தங்கள் நிலைப்பாடு, போர் நிறுத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முக்கிய முடிவுகள் குறித்து ஜெர்மனி அதிபரிடம் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், அமெரிக்க ஜனாதிபதியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்தும்போது அந்த பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கியும் பங்கேற்கிறார். இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷியாவுடனான போரில் உக்ரைனின் நிலைப்பாடு குறித்தும் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து டிரம்ப் இடம் ஜெலன்ஸ்கி தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை