ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்; 2 பேர் பலி

  தினத்தந்தி
ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்; 2 பேர் பலி

சனா,இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க டிரோன்கள், போர் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல், அமெரிக்கா அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இந்நிலையில், ஏமனில் இன்று அதிகாலை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஏமனின் தலைநகர் சனாவில் உள்ள அல்-ஷபன் மற்றும் பனி அல் ஹரித் ஆகிய 2 பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.செங்கடல் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமன் மீது அமெரிக்க விமானப்படை தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் இந்த தாக்குதல் தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை