மனித உரிமைகளை மதிக்கத் தெரியாதவர் குழந்தைகள் உரிமை ஆணைய தலைவரா? ராமதாஸ்

தினமணி  தினமணி

குழந்தைகள் உரிமை ஆணைய தலைவராக கல்யாணி மதிவாணன் நியமனம் செய்யப்பட்டதை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சட்டத்தை மிதித்து, நீதியை வீதியில் நிறுத்தும் செயலை சர்வசாதாரணமாக செய்யக்கூடிய அரசு ஜெயலலிதா தலைமையிலான அரசு தான். தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரை நியமிக்கும் விஷயத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் இதை உறுதி செய்கிறது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவி என்பது ஒரு நாள் கூட காலியாக இருக்கக்கூடாத பதவி ஆகும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அப்பதவி மார்ச் 17ஆம் தேதி காலியானது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அப்பதவி நிரப்பப்படாத நிலையில், ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு வாரங்களுக்குள் காலியிடங்களை விதிமுறைகளை பின்பற்றி நிரப்ப ஆணையிட்டது. ஆனால், எந்த விதியையும் பின்பற்றாமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய கல்யாணி மதிவாணனை நியமித்து அதற்கான ஆணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், இந்நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,‘‘எந்த அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். விளக்கம் திருப்தியளிக்க வில்லை என்றால் இந்த விஷயத்தில் நீதிமன்றமே முடிவெடுக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய  முக்கியக் கடமை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவருக்கு உள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான  தகுதி கல்யாணி மதிவாணனுக்கு சிறிதும் இல்லை. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் கடந்த காலங்களில் மனித உரிமை மீற்ல்களில் ஈடுபட்டிருக்கக்கூடாது என்று விதிகளில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அப்பதவிக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கல்யாணி மதிவாணன் மனித உரிமைகளை கிஞ்சிற்றும் மதிக்காதவர். காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது, அவரது முறைகேடுகளை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் சீனிவாசனை கூலிப்படை அமர்த்தி தாக்கியதாக கல்யாணி மதிவாணன் மீது மதுரை நாகமலை காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 109, 307, 324 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். துணைவேந்தர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர். இப்படிப்பட்டவர் கையில் குழந்தைகள் உரிமை ஆணையம் சிக்கினால் அதன் நிலையை நினைக்கவே அச்சமாக உள்ளது.

அதிமுகவின் அமைப்பு செயலாளராக இருக்கும் விசாலாட்சி நெடுஞ்செழியனின் மருமகள் என்பதைத் தவிர வேறு ஒரு தகுதியும் கல்யாணிக்கு கிடையாது. ஏற்கனவே, 93 வயதாகும் விசாலாட்சி மாநில மகளிர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த ஆணையம் மூன்றரை ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. கல்யாணி மதிவாணன் குழந்தைகள் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டால் அதன் நிலையும் அப்படித் தான் ஆகும். அதிமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 191% அதிகரித்துள்ளன. 2010ஆவது ஆண்டில்  810 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 2354 ஆக அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும் உள்ள ஒருவரை தலைவராக நியமித்தால் மட்டும் தான் ஆணையத்துக்கு புத்துயிரூட்டுவதுடன், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் குறைக்க முடியும்.

அதுமட்டுமின்றி, சட்டப்பூர்வ அமைப்புகள், ஆணையங்கள் ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகள் அதிமுகவினருக்கு மறுவாழ்வு வழங்கும் இடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தகுதியே இல்லாதவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தகவல் உரிமை ஆணையம் ஆகியவற்றின்  உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கான விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் நியமனம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில்,  இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய நியமனங்களை செய்வதற்கான புதிய விதிகளை வகுப்பதுடன், தேர்வுக் குழுவையும் அமைப்பதற்கான வாய்ப்புகளை உயர்நீதிமன்றம் ஆராய வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை