அரசுத் துறை செயலர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்

தினமணி  தினமணி
அரசுத் துறை செயலர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்

உயர்கல்வி, தொழில் துறை உள்பட 12 அரசு துறைகளில் காலியாக உள்ள செயலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் தொழில் துறை, மின் துறை, போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் செயலர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. உயர்கல்வித் துறையின் செயலர் பதவியும் ஜூன் 18-ஆம் தேதி முதல் காலியாக உள்ளது.

மேலும், வணிகவரித் துறை, பொதுத் துறை, பணியாளர் நலத் துறை (பயிற்சிப் பிரிவு செயலர்), அண்ணா மேலாண்மை நிறுவன இயக்குநர், கால்நடை பராமரிப்பு-பால்வளம் மற்றும் மீன்வளத் துறை, சமூக சீர்திருத்தத் துறை, சுற்றுலா-கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை, சட்டத் துறை, சிறப்பு முயற்சிகள் துறை ஆகியவற்றின் செயலர் இடங்களும் காலியாக உள்ளன. இந்த 12 துறைகளின் மானியக் கோரிக்கைகளும் முழுநேர செயலர்கள் இல்லாமல்தான் தயாரிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சர்களில் பெரும்பாலோருக்கு அவர்களின் துறை சார்ந்த வல்லமை இல்லாத நிலையில், செயலர்களும் இல்லாததால் துறை சார்ந்த எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இதேநிலை தொடர்ந்தால் தமிழகம் எல்லாத் துறைகளிலும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுவிடும். எனவே, அரசு துறை செயலர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை