நிதி நெருக்கடியால் பேரூராட்சிகள்...தவிப்பு:அத்யாவசிய பணிகளில் தொய்வு

தினமலர்  தினமலர்
நிதி நெருக்கடியால் பேரூராட்சிகள்...தவிப்பு:அத்யாவசிய பணிகளில் தொய்வு

கம்பம்:நிதிநெருக்கடி காரணமாக மாவட்ட பேரூராட்சிகளில் அத்யாவசிய பணிகளை கூட செய்ய முடியாத நிலையில் நிர்வாகங்கள் திண்டாடி வருகின்றன. அரசு அனுமதித்த நிதியை பயன்படுத்த உதவி இயக்குனர் அனுமதிக்க மறுத்து வருகிறார் என புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் 24 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றின் முக்கிய பணி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்குகள், பொதுச்சுகாதாரம் வழங்குவதேயாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் இருந்த போது, பணிகள் நடைபெறுவதில் தேக்கநிலை ஏற்பட்டதில்லை.ஆனால் இப்போது செயல் அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
கிராம ஊராட்சிகளில் மட்டும் தலைவருக்கு 'செக்' போடும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் அதிகாரிகளுக்கு 'செக்' போடும் அதிகாரம் இருந்தது.கவுன்சில் பதவிக்காலம் முடிந்து விட்டதால், தனி அலுவலரின் கட்டுப்பாட்டிற்கு பேரூராட்சி நிர்வாகங்கள் சென்று விட்டது. பேரூராட்சிகளில் எந்தசெலவு என்றாலும், சம்பந்தப்பட்ட உதவி இயக்குனரை கேட்டுத் தான் செய்ய வேண்டும்.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளில் பொதுநிதி 'கரைந்து' நிதி நிலை மிக மோசமாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அரசு நிதி ஒதுக்கீடுகளை அனுமதித்தது. அதன்படி தலா 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் செயல் அலுவலர்கள் நிம்மதியடைந்தனர். அத்யாவசிய பணிகளை காலதாமதமின்றி செய்யலாம் என நினைத்தனர். ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
எந்த செலவானாலும் உதவி இயக்குனர் அனுமதிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் செயல்அலுவலர்கள் பரிதவிக்கின்றனர். பகிர்மான குழாய் உடைப்பை சரி செய்வது, பிளீச்சிங் பவுடர் துாவுவது , பழுதான தெருவிளக்கை மாற்றுவது என பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
பேரூராட்சி பணியாளர்கள் கூறுகையில்,''கவுன்சில் இருந்தபோது தேவையற்ற பணிகள் செய்வதும், அவற்றிற்கு பணம் பொதுநிதியில் இருந்து கொடுப்பதும் நடந்தது. அதையே நினைத்துக் கொண்டு உதவி இயக்குனர் அத்யாவசிய பணிகளுக்கு கூட அனுமதி தர மறுக்கிறார். எனவே எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் பேரூராட்சி செயல்அலுவலர்கள் உள்ளனர்,' என்றனர்.

மூலக்கதை