எம்எல்ஏக்களை வழியனுப்புவதற்காக பள்ளி மாணவர்களை பாடுபடுத்திய அதிமுகவினர் - கூவத்தூரில் பரபரப்பு; மக்கள் கோபம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எம்எல்ஏக்களை வழியனுப்புவதற்காக பள்ளி மாணவர்களை பாடுபடுத்திய அதிமுகவினர்  கூவத்தூரில் பரபரப்பு; மக்கள் கோபம்

திருப்போரூர்- கூவத்தூர் ரிசார்ட்சில் இருந்து அதிமுக எம்எல்ஏக்களை வழியனுப்புவதற்காக பள்ளி மாணவ, மாணவிகளின் கைகளில் இரட்டை இலை சின்னத்தை கொடுத்து அழைத்து வந்த அதிமுகவினர் அவர்களை பாடாய்படுத்தினர். இதனால், அப்பகுதி மக்கள் கோபமடைந்தனர்.

கூவத்தூர், வாயலூர் ஆகிய பகுதிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் வாயலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 60 மாணவ, மாணவிகளை இன்று அதிகாலை 4 மணியளவில் எழுப்பி குளிக்க வைத்து சீருடை உடுத்தி, கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், வேனில் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டுக்கு அதிமுகவினர் அழைத்து வந்தனர்.

ரிசார்ட்சில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்களை வாழ்த்தி வழியனுப்பவும், எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வாழ்த்தவும் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இவர்களை விடுதி நிர்வாகியும், அகில இந்திய கிறிஸ்துவ விடுதலை முன்னணி என்ற அமைப்பை சேர்ந்தவருமான தேவக்குமார் என்பவர் அழைத்து வந்துள்ளார். மாணவர்கள், தங்களது கைகளில் பிளாஸ்டிக்கால் ஆன இரட்டை இலை சின்னத்தை பிடித்தபடி வந்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘எங்களை அதிகாலை 4 மணிக்கே எழுப்பினர். இன்று பள்ளிக்கு போகத் தேவையில்லை.

முதல்வரை வாழ்த்த செல்ல வேண்டும் என கூறி, குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வைத்தனர். பின்னர் சீருடையுடன் வேனில் ஏற்றி ரிசார்ட்சிற்கு அழைத்து வந்த நிற்க வைத்துள்ளனர்’ என்றனர்.

12ம் வகுப்பு தேர்வு தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் மாணவர்களை இப்படி அழைத்து வந்து நிற்க வைத்தது சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோபத்துடன் அதிமுகவினரை விமர்சித்தனர்.

பள்ளி நிர்வாகியை பலர் சாடியதால், வேறு வழியின்றி மாணவர்கள் திரும்ப அழைத்து செல்லப்பட்டனர்.

.

மூலக்கதை