மேனகாவுக்கு இணையான அந்தஸ்து கோரும் இணையமைச்சர்!

தினமணி  தினமணி
மேனகாவுக்கு இணையான அந்தஸ்து கோரும் இணையமைச்சர்!

மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு இணையான அந்தஸ்தை புதிதாக இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கிருஷ்ணா ராஜ் (49) கோருவதால் அங்கு பணியாற்றும் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பெண் எம்.பி. கிருஷ்ணா ராஜுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அவருக்கு "அமைச்சர்' பதவி வழங்குவதன் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் சமுதாய வாக்கு வங்கியை ஈர்க்க முடியும் என்று கருதி இந்த உத்தியை பாஜக வகுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லியில் உள்ள சாஸ்திரி பவன் கட்டடத்தில் மத்திய இணையமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு, மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அதிகாரிகளுக்கு அவர் பிறப்பிக்கும் திடீர் உத்தரவுகளால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றதும் சி-விங் ஐந்தாவது மாடியில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த அறைக்கு செல்ல முடியாது என்று பிடிவாதமாக மறுத்த கிருஷ்ணா ராஜ், மேனகா காந்தி எங்கு உள்ளாரோ அந்த அறைக்கு அருகிலேயே தனக்கும் அறை தேவை என்று கோரினார். இதனால், அவருக்கு ஆறாவது தளத்திலேயே அறை ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தனக்கு அரசு ஒதுக்கிய கார் தேவையில்லை என்றும் "எஸ்யுவி' ரக சொகுசு கார் தேவை என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, மேனகாவின் சிறப்பு அனுமதியுடன் கிருஷ்ணா ராஜ்க்கு "டொயோட்டா' காரை வழங்க அவரது அமைச்சகம் நிதி ஒதுக்கியது. இந்நிலையில், பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சகத்தில் மேனகா காந்திக்கு இணையாக தனக்கும் அதிகாரம் தேவை என்றும் அவர் கேட்டுள்ளார். இதுபற்றி எந்த முடிவையும் மேனகா தரப்பு தெரிவிக்காத நிலையில், கடந்த சில நாள்களாக அலுவலகத்துக்கு வருவதையும் கிருஷ்ணா ராஜ் நிறுத்திக் கொண்டதாகத் தெரிகிறது.

மூலக்கதை