புதுப்பொலிவு பெறுகிறது பிரதமர் அலுவலகம்

தினமணி  தினமணி

தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இரவு பகலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் முகப்பு வாயில் அருகே உள்ள சௌத் பிளாக் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ அலுவலகம் உள்ளது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் அலுவலகத்தில் கோப்புகள் மூலம் ஆவணங்கள் பராமரிக்கப்படும் வழக்கத்துக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. காகிதப் பயன்பாடு குறைவான அலுவலகமாக பிரதமர் அலுவலகம் திகழ்கிறது. இதையடுத்து, தனது அலுவலகத்தைப் புதுப்பிக்க நரேந்திர மோடி விரும்பினார்.

ஆங்கிலேயர் கால கட்டடமான பிரதமர் அலுவலகத்தைப் பராமரிக்கவும், புதுப்பிக்கவும் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தில்லியில் லுட்யன்ஸ் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை அந்த தனியார் நிறுவனம் கட்டியுள்ளதால், தகுதியின் அடிப்படையில் அந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புதுப்பிப்புப் பணியில் 400 பேர்: இதைத் தொடர்ந்து, கட்டுமானம், தச்சு வேலை, கட்டடப் பராமரிப்பு ஆகிய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் சுமார் 350 பேரும், அவர்களை மேற்பார்வையிடும் அலுவலர்கள், பொறியாளர்கள், கட்டடக் கலை வல்லுநர்கள் என 50 பேரும் பிரதமர் அலுவலகத்துக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுமுறை நாள்கள் நீங்கலாக இவர்கள் இரவு, பகலாக பிரதமர் அலுவலக பராமரிப்பு, புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகளுக்காக விலை உயர்ந்த தேக்கு மரங்கள், ராஜஸ்தான் சலவைக் கற்கள், பளிங்கு கற்கள், காஷ்மீர் கம்பளங்கள் உள்ளிட்டவை பிரதமர் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் அதிருப்தி: பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், நடைமுறை விதிகளின்படி கடுமையான சோதனைக்கு பிறகே பிரதமர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் கொண்டு வரும் சாப்பாடு டப்பாக்களை மோப்ப நாய்கள் முகர்ந்து எவ்வித சந்தேகமும் எழவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்தனர். உணவு கொண்டு வரும் டப்பாக்களை நாய்கள் மூலம் சோதனையிட ஆட்சேபம் தெரிவித்து அவர்கள் கடந்த வாரம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் நடவடிக்கை: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2-ஆம் தேதி வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்படும் முன்பு கட்டுமான தொழிலாளர்களை அவர்கள் பணிபுரியும் பகுதிகளுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து, உடனடியாக பிரதமர் அலுவலக வளாகத்துக்கு வெளியே தாற்காலிக உணவகம் திறக்கப்பட்டது. இதனால், தொடக்கத்தில் அதிருப்தியுடன் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பிரதமரே தங்கள் நலனில் அக்கறை காட்டியதைத் தொடர்ந்து தற்போது மிகவும் தீவிரமாக அலுவலகப் புதுப்பிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் அனைத்தும் வரும் வார இறுதிக்குள் முடிவடையும் என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை