நெருக்கடியில் காகிதக் கூம்பு ஆலைகள்

தினமணி  தினமணி
நெருக்கடியில் காகிதக் கூம்பு ஆலைகள்

நூல் விலை ஏற்ற, இறக்கத்தைக் கொண்டுள்ளதால், தமிழகத்தில் காகிதக் கூம்பு ஆலைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

ஜவுளித் தொழிலுக்கு மிகவும் அவசியத் தேவையான நூல், துணிகள், காகிதக் கூம்பு மற்றும் உருளைகளில்தான் சுற்றி வைக்கப்படுகின்றன. காகித கோன், காகித உருளை ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகள் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளன.

தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காகித கோன்கள், உருளைகளில் 40 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மாநிலத்தில் சுமார் 800 ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 120 ஆலைகள் ஈரோடு, கோபி, கொடுமுடி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆலைகளை நம்பி நேரடியாக 20,000 தொழிலாளர்களும், மறைமுகமாக 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். நூல் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, காகித விலை ஏற்றம், மின் வெட்டு ஆகியவை காரணமாக காகித கோன் உற்பத்தித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நேரத்தில்தான் காகித கோன்கள் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு தீபாவளி நேரத்தைவிட இந்த ஆண்டு 75 சதவீதம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் காகிதக் கூம்பு உற்பத்தியாளர்கள்.

இதுகுறித்து வெண்டிபாளையத்தைச் சேர்ந்த காகிதக் கூம்பு உற்பத்தி ஆலை உரிமையாளர் எஸ். பிரபு கூறியதாவது:

கூம்பு தயாரிக்கத் தேவையான காகிதம் ஒரு டன் ரூ. 24,000-ஆக உள்ளது. ஒரு டன் காகிதத்தில் 14,000 கோன்கள் உற்பத்தி செய்ய முடியும். இதற்கான உற்பத்திச் செலவு ரூ. 10,000 ஆகிறது. ஒரு காகிதக் கூம்பு ரூ. 2.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நூல் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கம் காரணமாக காகிதக் கூம்புகள் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதுகுறித்து தென்னிந்திய தொழில் நிறுவனக் காகித கோன், உருளை உற்பத்தியாளர்கள் சங்கச் செயலர் கே. குப்புசாமி கூறியதாவது:

பருத்தி வர்த்தகம் சீராக இல்லாததால் நூல் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால், ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜவுளி சார்ந்த உபதொழிலான காகிதக் கூம்பு வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆலைகளில் நாளொன்றுக்கு 80 லட்சம் கோன்கள் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இப்போது 40 லட்சம் கோன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. கிடங்குகளில் 10 கோடி கூம்புகள் தேங்கிக் கிடக்கின்றன. மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே கூடுதலாக உற்பத்தி செய்து வைத்துள்ளோம்.

மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையில் தலையிட்டு நூல் விலை ஏற்ற, இறக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஜவுளி வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்றார் அவர்.

மூலக்கதை