கருணை, இரக்கம், அன்பின் மறு உருவம் அன்னை தெரஸா: சோனியா காந்தி

தினமணி  தினமணி
கருணை, இரக்கம், அன்பின் மறு உருவம் அன்னை தெரஸா: சோனியா காந்தி

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கருணை, இரக்கம் மற்றும் அன்பின் மறுஉருவம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

அன்னை தெரஸா, கொல்கத்தா நகரில் உள்ள ஏழைகளுக்கு சுமார் 45 ஆண்டுகள் சகிப்புத்தன்மையுடன் சேவை புரிந்தார். அவர் 1997-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் காலமானார்.

தனது இறப்புக்குப் பின், சாவின் விளிம்பில் இருந்த இருவருக்கு நோய் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு அவர்களை உயிருடன் மீட்டு தெரஸா அற்புதங்களை நிகழ்த்தியமைக்காக கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய போப் ஜான் பால் அருளாளர் பட்டத்தை (புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதல்படி) அறிவித்தார். இதைத் தொடர்ந்து தெரஸாவுக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று தற்போதைய போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து ரோமில் உள்ள வாடிகனில் அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், "இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு, ஏழைகளுக்கு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு அன்னை தெரஸா ஆற்றிய சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இந்த புனிதர் பட்டத்தைக் கருத வேண்டும். கருணை, இரக்கம் மற்றும் அன்பு ஆகியவற்றின் மறு உருவமாகத் திகழ்ந்தவர் அன்னை தெரஸா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டிக்கு எனது வாழ்த்துக்கள். அனைத்து இந்தியர்களும் பெருமைப்படக் கூடிய நேரம் இதுவாகும் என்று சோனியா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை