அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவார்த்தை: பிரிவினைவாதிகளுக்கு மெஹபூபா அழைப்பு

தினமணி  தினமணி
அனைத்துக் கட்சிக் குழு பேச்சுவார்த்தை: பிரிவினைவாதிகளுக்கு மெஹபூபா அழைப்பு

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு பிரிவினைவாதத் தலைவர்களுக்கு அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி அழைப்பு விடுத்துள்ளார்.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக அசாதாரணச் சூழல் நிலவி வருகிறது. பொதுமக்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதலில் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே, காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் காஷ்மீருக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கின்றனர்.

மெஹபூபா கடிதம்: இந்நிலையில், இந்த அனைத்துக் கட்சிக் குழுவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு பிரிவினைவாத அமைப்புகளுக்கு முதல்வர் மெஹபூபா முஃப்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு அவர் சனிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீர் முதல்வராக அல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நமது மாநில பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் குழுவுடன் பேச்சுவார்த்தையில் நீங்கள் (பிரிவினைவாதத் தலைவர்கள்) பங்கெடுக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரை நாம் அனைவரும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவர்கள்தான். ஆனால், ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்ற சிந்தனையில் நாம் ஒன்றுபடுபவர்கள்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்னை தற்போதுதான் முதன்முறையாக நாடெங்கிலும் பேசப்படுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீர் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நாம் முயற்சிக்க வேண்டும்.

அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தையின்போது, காஷ்மீர் பிரச்னைகள் உங்களின் சொந்தக் கருத்துகளை பதிவு செய்யுங்கள். காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக நீங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் கட்டாயம் பங்குபெற வேண்டும் என அந்தக் கடிதத்தில் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரிவினைவாதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மூலக்கதை