விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

தினமணி  தினமணி
விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.6,630 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை சனிக்கிழமை முடக்கியது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் இருந்து ரூ.900 கோடி கடன் பெற்றுக் கொண்டு திரும்பச் செலுத்தாதது தொடர்பாக கிங்ஃபிஷர் நிறுவனம், அதன் அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.6,027 கோடி கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதது தொடர்பாக குற்றச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மல்லையா மீதும், கிங்ஃபிஷர், யுனைடெட் ப்ரிவரீஸ் ஆகிய நிறுவனங்களின் மீதும் சிபிஐ கடந்த மாதம் புதிய வழக்கைப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தையும் அமலாக்கத் துறை தனது விசாரணை வளையத்துக்குள் அண்மையில் கொண்டு வந்தது.

இந்நிலையில், விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக மகாராஷ்டிரத்தின் அலிபாக்கில் உள்ள மாண்ட்வாவில் இருக்கும் ரூ.25 கோடி மதிப்பிலான பண்ணை வீடு, பெங்களூரில் இருக்கும் ரூ.565 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு, தனியார் வங்கியில் மல்லையாவின் ரூ.10 கோடி முதலீடுகள், யுஎஸ்எல், யுனைடெட் ப்ரிவரீஸ், மெக்டவல் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் மல்லையாவுக்கு இருக்கும் முதலீடுகள், யூபிஹெச்எல் நிறுவனம், மல்லையாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இதர நிறுவனங்கள் ஆகியவற்றை அமலாக்கத் துறை சனிக்கிழமை முடக்கியது. இவற்றின் மதிப்பு ரூ.3,635 கோடி ஆகும்.

இந்த சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சனிக்கிழமை பிறப்பித்தது. அந்த உத்தரவில், "இன்று முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.4,234.84 கோடி ஆகும். ஆனால் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.6,630 கோடி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை