நில பேர ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் முதல்வர் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிரடிச் சோதனை

தினமணி  தினமணி
நில பேர ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் முதல்வர் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிரடிச் சோதனை

நிலமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக சிபிஐ-யின் செய்தித் தொடர்பாளர் ஆர்.கே.கெüர் தெரிவிக்கையில், "நிலமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அப்போதைய முதன்மைச் செயலாளர் எம்.எல்.தயாள், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் சத்தர் சிங், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் தற்போதைய ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.எஸ்.தில்லான் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் எங்கள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது நடைபெற்றும் வரும் புலன் விசாரணையில், ரோத்தக், குர்கான், பஞ்ச்குலா, தில்லி உள்பட 20 இடங்களில் எங்கள் அதிகாரிகள் சோதனை நடத்தினர்' என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

அவரது பதவிக்காலத்தில் குர்காவ்னில் உள்ள மானேசர், நெüரங்பூர் மற்றும் லக்னெüலா ஆகிய கிராமங்களில் தொழில் நகரம் உருவாக்குவதற்காக 912 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாக ஹரியாணா அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்நிலையில், நிலங்களை அரசு மிகக் குறைந்த விலைக்கு கையகப்படுத்திவிடும் என்று அச்சுறுத்தி, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து சுமார் 400 ஏக்கர் நிலங்களை தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று அடிமாட்டு விலைக்கு வாங்கியதாகவும், அதற்கு அரசு அதிகாரிகள் உதவியதாகவும் கூறப்படுகிறது.

நிலமோசடி குறித்து தற்போதைய முதல்வர் மனோகர் லால் கட்டர் அரசு புகார் அளித்தது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

அதில், அன்றைய காலகட்டத்தில் சந்தை மதிப்பின்படி, ஒரு ஏக்கர் நிலம் ரூ.4 கோடிக்கு விற்பனையானது என்றும், அரசின் துணையுடன் தனியார் கட்டுமான நிறுவனம் கையகப்படுத்திய 400 ஏக்கர் நிலத்தின் அன்றைய மதிப்பு ரூ.1,600 கோடி என்றும் தெரியவந்தது.

மேலும் அப்பாவி மக்களை ஏமாற்றி ரூ.1,600 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.100 கோடிக்கு வாங்கி, ரூ. 1500 கோடியை அந்த தனியார் நிறுவனம் ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

மூலக்கதை