ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாபம் ரூ.361 கோடி

தினமணி  தினமணி

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சென்ற நிதி ஆண்டில் ரூ.361 கோடி லாபம் ஈட்டியது.

இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் தலைமைச் செயல் அதிகாரி கே. சியாம் சுந்தர் கூறியதாவது:

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது செயல்பாட்டை கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கியது. அது முதல் தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்த நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் முதல் முறையாக லாபம் ஈட்டியுள்ளது.

சென்ற 2015-16-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் மொத்த வருவாய் ரூ.2,917.96 கோடியாக இருந்தது. 2014-15-இல் ஈட்டிய லாபமான ரூ.2,622 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 11.3 சதவீதம் அதிகமாகும்.

இதர வகையிலான வருவாய் பெருக்கத்தில் தீவிர கவனம் செலுத்தியதையடுத்து, நிறுவனத்தின் மொத்த வருவாய் சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது.

2014-15-ஆம் நிதி ஆண்டில் ரூ.61 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த நிதி ஆண்டில் முதல் முறையாக நிறுவனம் ரூ.361.68 கோடி நிகர லாபம் ஈட்டியது.

நிறுவனம் கையாண்ட பயணிகள் எண்ணிக்கை 26.20 லட்சத்திலிருந்து 28 லட்சமாக அதிகரித்தது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நடப்பு நிதி ஆண்டில் ஆறு விமானங்களை கூடுதலாக சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், முதல் காலாண்டில் மூன்று விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவ்வாண்டின் இறுதிக்குள் மேலும் மூன்று விமானங்கள் விமானச் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இதையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் மொத்த விமானங்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரிக்கும்.

இதனால், பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டில் செயல்பாட்டு வருவாய் 25 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் புது தில்லியிலிருந்து துபை மற்றும் அபுதாபிக்கு விமானச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வட இந்திய மற்றும் தென்னிந்திய சந்தைகளிலும் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கத் தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

மூலக்கதை