ரூ.249-இல் வரம்பற்ற இணைய சேவை: பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்

தினமணி  தினமணி

பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம், ரூ.249-க்கு வரம்பற்ற பிராட்பேண்ட் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் கம்பிவழியான பிராட்பேண்ட் இணையதள சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி ரூ.249 திட்டத்தின் கீழ் வரம்பற்ற இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.

இதையடுத்து, ரூ.1-க்கு 1 ஜிபி தகவல்களை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மாதத்துக்கு 300 ஜிபி வரையிலான டேட்டாவை வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆறு மாதத்துக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பிராட்பேண்ட் திட்டங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வரும் செப்டம்பர் 9-ஆம் தேதியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று பி.எஸ்.என்.எல். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவைக்கான கட்டணத்தை 1 ஜி.பி.க்கு ரூ.25 முதல் ரூ.50 வரையில் நிர்ணயித்துள்ளது. அந்தப் போட்டியை சமாளிக்கும் விதமாகவே பி.எஸ்.என்.எல். இந்தச் சலுகைத் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை