ரூபி வாரியர் காஞ்சி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தினமணி  தினமணி

தமிழ்நாடு பிரீமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்க ரூபி வாரியர்ஸ் காஞ்சி அணியை வீழ்த்தியது

இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

டாûஸ வென்ற ரூபி வாரியர்ஸ் காஞ்சி அணி முதலில் களமிறங்கியது. மழையின் காரணமாக போட்டி 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

13 ஓவர்களில் ரூபி வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

முன்னதாக ரூபி வாரியர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது தொடக்க ஆட்டக்காரர்களாக பரத் சங்கர், நிலேஷ் சுப்பிரமணியன் ஆகியோர் களமிறங்கினர். இதில் பரத் சங்கர் 12 ரன்களில் பெவிலியன் வந்தார். நிலேஷ் சுப்பிரமணியன் 25 ரன்கள் குவித்தார். இதில் 4 பெளண்டரிகளை அவர் விளாசினார்.

பின்னர் வந்த இந்திரஜித் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். சித்தார்த் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஷாருக் கான் அபாரமாக 26 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இதையடுத்து 97 ரன்களுக்குச் சுருண்டது காஞ்சி வாரியர்ஸ்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் குமரன் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் வெற்றிக்கு 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சற்குணம் 5 ரன்களும்,கோபிநாத் 2 ரன்களும் எடுத்து வீழ்ந்தனர். பின்னர் வந்த சுபாஷ் 23 ரன்கள் சேர்த்தார். பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சரவணனும், ஆர். சதீஷும் அபாரமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.

சரவணன் 50 ரன்களும், சதீஷ் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 11.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

மூலக்கதை