சசிகுமாரின் ‘கிடாரி’ பட விமரிசனம் – ரத்தக் காட்டேரி!

தினமணி  தினமணி
சசிகுமாரின் ‘கிடாரி’ பட விமரிசனம் – ரத்தக் காட்டேரி!

பழைய திருவிளையாடல் திரைப்படத்தின் வசன பாணியில், பிரிக்க முடியாதது… என்கிற கேள்விக்கு ‘சசிகுமாரும் - தாடி, அரிவாளும்’ என்று புதிதான பதில் ஒன்றை இணைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு மனிதர் இரண்டையுமே கைவிடும் உத்தேசம் இல்லாமலிருக்கிறார். ‘சார்.. உங்க நண்பனுக்காக நீங்க அரிவாளை எடுத்துக்கிட்டு எங்கயோ ஆவேசமா ஓடறீங்க..’ என்று கதை சொல்ல வரும் இயக்குநர் முதல் வரியை முடிக்கும் முன்னரே அவரை இயக்குநராக உறுதிப்படுத்தி, தயாரிப்பையும் உடனே ஏற்றுக்கொள்வார் போலிருக்கிறது.

தமிழில் இப்படி அரிவாள் நாயகர்கள் என்கிற தனிவகைமையே இருக்கிறது. கமல்ஹாசனில் தொடங்கி நெப்போலியன், ராஜ்கிரண், விஷால் என இரண்டு மூன்று தலைமுறையாக இந்த அரிவாள் கலாசாரத்தையும் குறிப்பிட்ட சமூகத்தின் சாதிப் பெருமிதங்களை விதந்தோதும் ஆபத்தான கருத்தியலையும் தொடர்ந்து இவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் சாதியக் கட்சிகளின் வளர்ச்சியும் அதுசார்ந்த பாகுபாடுகளும் பெருகிக் கொண்டே போவதையும் ஆதிக்கச் சாதிகளின் வன்முறைகளால் பல்வேறு விதமாக ஒடுக்கப்படும் எளிய சமூகங்களைப் பற்றியும் இவர்களுக்கு எவ்வித சமூக அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.

இந்த ஆபத்தான மற்றும் அபத்தமான வரிசையில் காட்சிக்குக் காட்சி ரத்தம் சொட்டச் சொட்ட வந்திருக்கும் படமே – கிடாரி. ரத்தக்காட்டேரி என்றே தலைப்பை வைத்திருக்கலாம். அதற்குமுன் பன்னெடுங்காலமாக உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அரிவாள் கலாசாரத்தில் ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கும் நவீன மாற்றங்களைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

தமிழ்நாட்டில், திரையின் உள்ளேயும் வெளியேயும் இயங்கும் அரிவாள் கலாசாரத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான். வல்லரசு நாடுகளில் நவீன வகை ஆயுதங்களை உற்பத்தி செய்யும் வியாபாரிகள், தங்கள் பொருள்களை சந்தைப்படுத்துவதற்காக சர்வதேச அளவில் எத்தனையோ தகிடுதத்தங்களை செய்து சிரமப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் அதிநவீன ஆயுதங்களை சந்தைப்படுத்த தமிழகத்திலும் ஏற்ற பிரதேசங்கள் உள்ளன என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதற்குச் சான்றாக மேற்குறிப்பிட்ட தமிழ்த் திரைப்படங்களின் டிவிடிக்களையும் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். பாவம், இவர்களும் எத்தனை நாளைக்குத்தான் ஆபத்தான முறையில் அரிவாளை முதுகிலும் இடுப்பிலும் சுமந்து கொண்டு ஓடித் துரத்தி, கசாப்புக் கடைக்காரர்கள் மாதிரி சிரமப்பட்டு வெட்டிக்கொண்டு, சட்டையெல்லாம் ரத்தக்கறையாக்கிக் கொண்டு, அந்தச் சாட்சியங்களை மறைக்க இன்னமும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள்?! செல்போன் முதற்கொண்டு மற்ற வகைகளில் நவீன வசதிகளைப் பின்பற்றினாலும், இந்த ஆயுத விஷயத்தில்தான் அறியாமை காரணமாக இன்னமும் பழமையான கலாசாரத்தை இவர்கள் பின்பற்றித் தொலைக்கவேண்டியிருக்கிறது.

நிற்க, இதையெல்லாம் அவல நகைச்சுவை நோக்கில், அது சார்ந்த கசப்புடன்தான் சொல்லியிருக்கிறேன்.

**

‘கிடாரி’ படத்தின் விமரிசனத்தை, கதையை வாசிக்கலாம் என்று வந்தால் சம்பந்தா சம்பந்தாமில்லாமல் எதை, எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறாயே என்று நீங்கள் முணுமுணுப்புடன் சொல்வது காதில் விழத்தான் செய்கிறது.

அப்படியொன்று ஏதாவது இருந்தால் இந்நேரம் சொல்லியிருக்க மாட்டேனா, தோழர்களே. சரி. நீங்கள் வற்புறுத்துவதால் இந்த திரைப்படத்தில் இருக்கும் விஷயங்கள் சிலதை தேடியாவது சொல்லி விடுகிறேன்.

கொம்பையா பாண்டியன் (வேல ராமமூர்த்தி) என்பவர் ரத்தச் சகதியில் மிதக்கும் மங்கலகரமான காட்சியுடன் படம் தொடங்குகிறது. (பாத்திரங்களின் பெயர்களில் பின்னொட்டாக வரும் சமூக அடையாளத்தை பார்வையாளர்களே எளிதில் புரிந்து கொள்ளும் வாய்ப்பை இயக்குநர் வழங்கியிருக்கிறார்.)

கொம்பையாவின் தொடக்க காலத்திலிருந்தே அவருடன் கூட்டாளியாக இருக்கும் (மு.ராமசாமி) கணக்குப்பிள்ளையின் வாய்ஸ் ஓவரின் மூலமாக கொம்பையாவின் பின்னணி விரிகிறது. இவர் அவருக்குப் பங்காளி, இவனுக்கு அவனோடு பகை என்று கணக்குப்பிள்ளை மூச்சு விடாமல் சொல்லும் தகவல்களை நாம் உள்வாங்கிக் கொள்வதற்குள் மண்டை காய்ந்து விடுகிறது.

கொம்பையா தன் சண்டியர்தனத்தின் மூலமாக செய்த ஆக்கிரமிப்பினால் ஊரைத் தாண்டியும் பல நபர்களின் பகைமையைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். அவரது கொலைமுயற்சிக்கான நபர்களையும் காரணங்களையும் தேடி படம் அலைகிறது.

கொம்பையா பாண்டியனின் விசுவாசமான அடியாள் கிடாரி (சசிகுமார்). கிடாரியின் இளவயதில் அவனது தந்தை கொல்லப்பட அவனைத் தன் வீட்டில் வளர்க்கிறார் கொம்பையா. ‘உப்பு போட்டு சாப்பாடு போட்ட’ என்கிற கோட்பாட்டு ரீதியான விசுவாசத்துக்காக கொம்பையாவின் மீது ஒரு துரும்பு கூட விழக்கூடாது என்று கண்ணுங்கருத்துமாக பாதுகாவலனாக இருக்கிறான் கிடாரி.

ஐயா.. இதெல்லாம் எம்.ஜி.ஆர் – நம்பியார் காலத்து கதையாச்சே.. என்று நீங்கள் கதறுவது காதில் கேட்கத்தான் செய்கிறது. மூச்.. கிடாரியின் காதில் நீங்கள் கதறுவது கேட்டால் அரிவாள் உங்கள் மீது பாயும் ஆபத்து இருக்கிறது. எனவே பொறுமை.. பொறுமை..

கொம்பையா பாண்டியனைச் ‘சம்பவம்’ செய்ய எவரெல்லாம் முயன்றிருப்பார்கள் என்று சில நபர்களை வரிசையாகக் காட்டுகிறார் இயக்குநர். அவர்களுக்கும் கொம்பையாவுக்கும் பகைமை உண்டாகிய காரணங்களும் விரிகின்றன.

பல்வேறு ‘சதக் சதக்’களுக்குப் பிறகு கொம்பையாவைத் தாக்கியவரையும் அதன் பின்னணியையும் பற்றி அறிந்த பின்பு கிடாரி என்ன செய்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.

**

இது பழிவாங்கும் வன்முறைப் படமா அல்லது காமெடிப் படமா என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாத வகையில் எடுத்திருப்பது இயக்குநரின் திறமைக்குச் சான்று. சசிகுமார் ஒன் மேன் ஆர்மி மாதிரி இருக்கிறார். ஹிட்லர், முஸோலினி, இடி அமீன், பின்லேடன் என்று பலர் வரிசையாக வந்திருந்தால் கூட இவருடைய அரிவாளுக்குப் பரிதாபமாகப் பலியாக வேண்டியதுதான். அத்தனை புஜபல பராக்கிரமசாலியாக இவரைச் சித்தரிக்கிறார்கள். இதைக் கூட ஒருமாதிரியாக சகித்துக் கொண்டு விடலாம். ஆனால் டெரர் முகத்தை சட்டென்று மாற்றிக் கொண்டு இளிப்புடன் இவர் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளைத்தான் சகிக்கவே முடியவில்லை. ‘நண்பனுக்காக எதையும் செய்வம்டா’ என்று பேசாமலிருப்பதுதான் இதிலிருக்கும் ஒரே ஆறுதல். ஆனால் நண்பனுக்குப் பதிலாக முதலாளியிடம் விசுவாசத்தைக் காண்பிக்கிறார்.

இதில் வரும் நாயகிக்கு ஏதாவது ‘ஹார்மோன்கள்’ ஓவர் டைம் செய்யும் பிரச்னையா என்று தெரியவில்லை. கிடாரியின் உதட்டு முத்தத்துக்காக படம் பூராவும் ஏங்கிக் கொண்டேயிருக்கிறார். கடுமையான பல தடைகளுக்குப் பிறகே அது சாத்தியமாகிறது.

படத்தில் பல ரணகளமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் போலீஸ்காரர்கள் என்கிற ஆசாமிகளைத் தேட வேண்டியிருக்கிறது. ஆம்.. தொடக்கத்தில் வருகிறார்கள். அதே ஊரைச் சார்ந்த போலீஸ்காரர், கொம்பையாவின் வீட்டிலேயே மோரை வாங்கிக் குடித்து விட்டு அவர்களுக்குச் சார்பாக இருக்கிறாரே என்று இயக்குநர் தீர்க்கமாக யோசித்ததால் ஒரு நேர்மையான வடஇந்திய காவல்துறை அதிகாரியைச் சிறிது நேரம் காட்டுகிறார். பிறகு படத்தில் அவரும் எங்குமே தென்படுவதில்லை.

**

வேலராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ர (அறிமுகம்) என்று மூன்று எழுத்தாளர்கள் தொடர்புடைய திரைப்படம் என்றொரு தகவல் கூட இந்தப் படத்தின் மீது சிறிது நம்பிக்கையை முதலில் எனக்கு ஏற்படுத்தியது. ஆனால் என்ன உபயோகம்?

வேலராமமூர்த்தியின் உருவமும் நடிப்பும் கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஓர் அச்சு அசலான திராவிட இனத்துப் பிரதிநிதியின் சித்திரம்தான். ஆனால் இதே பாணியில் தொடர்ந்தால் அவர் இன்னொரு வினுசக்கரவர்த்தியாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. மு.ராமசாமியின் நடிப்பு இயல்புத்தன்மையுடன் இருந்தது. அறிமுகம் என்றே சொல்ல முடியாமல் வசுமித்ர நிறைவாக நடித்திருக்கிறார். கொம்பையா தேவரின் மறைமுகப் பகையாளிகளில் ஒருவராக வரும் ஓ.ஏ.கே. சுந்தரின் நடிப்பு ரகளையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கதிர் உள்ளிட்ட நுட்பக் கலைஞர்களின் உழைப்பெல்லாம் பிரமிப்பை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கிறது. ஆனால் சலிப்பூட்டும் திரைக்கதை இந்த உழைப்பையெல்லாம் வீணாக்குகிறது. ராஜதந்திரம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் வந்த தர்புகா சிவா இதில் இசையமைப்பாளர். பாடல்கள் அத்தனை கவராவிட்டாலும் அபாரமான பின்னணியிசையில் அதை ஈடுசெய்திருக்கிறார்.

**

அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன், வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக பணியாற்றவராம். என்ன சொல்ல? ஒவ்வொரு எபிசோடாக விரியும் திரைக்கதை உத்தியும் அதற்கான மெனக்கெடல்களும் சுவாரசியம்தான். ஆனால் உணர்வுபூர்வமாக எந்தவொரு பாத்திரத்துடனும் நம்மால் ஒன்ற முடியாததால் ‘கொம்பையா பாண்டியனை எவன் வெட்டினால் எனக்கென்னடா, ஆளை விடுங்கடா’ என்று தெறித்து ஓட வேண்டியிருக்கிறது. பழைய அம்பாஸிடரையும் சினிமா போஸ்டர்களையும் காட்டிவிட்டு இதன் காலகட்டம் எண்பதுகளில் நிகழ்கிறது என்று அபத்தமாக காட்ட முயல்வதின் மூலம் ‘இது சமகால நிகழ்வுகள் அல்ல’ என்று இயக்குநர் மழுப்ப விரும்புகிறாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா எனத் தெரியவில்லை.

இதில் வரும் ஒரு முதியவர் அசந்தர்ப்பமான சூழலில் பேசும் வசனங்கள்தான் நகைச்சுவையாம். இந்த நகைச்சுவைப் பாணிக்கும் முதியவருக்கும் ஏறத்தாழ ஒரே வயதுதான் இருக்கும். அத்தனை பழமையான எரிச்சல்.

போலவே இந்த திரைப்படத்தின் படத்தலைப்பான ‘கிடாரி’ நாயகனின் பெருமையான அடையாளமாகச் சுட்டப்படுகிறது. அந்தப் பிரதேசத்தின் வீரமிகு இளைஞர்களை அப்படி அழைக்கும் வழக்கமிருக்கிறதாம். ஆனால் ‘கிடாரி’ என்பதற்கு ‘ஈனாத இளம் பசு’ என்று பெண்ணின அடையாளம் சார்ந்த பொருள்தான் இருக்கிறது. இதில் நாயகனுக்கு என்ன பெருமை? இதில் இந்தத் தலைப்பை சமுத்திரக்கனியிடமிருந்து கடன் வாங்கி வைத்திருக்கிறார்களாம். கடவுளே!

தேவர் மகன் போன்ற திரைப்படங்களில் படம் முழுக்க வன்முறையைச் சித்தரித்தாலும், சம்பிரதாயத்துக்காக என்றாலும், படத்தின் இறுதியில் ‘போய் புள்ளகுட்டிங்களைப் படிக்க வைங்கடா’ என்கிற வன்முறைக்கு எதிரான நீதியின் குரல் அவைகளில் ஒலித்தது. ஆனால் கிடாரியில் அப்படி எதுவுமில்லை. ஒரு சமூகத்தின் நபர்களுக்குள் நிகழும் அதிகாரப் போட்டி தொடர்பான மோதல்கள் என்றாலும் அதன் நாயகன், சட்டத்தினாலும் அறத்தினாலும் அல்லது எவராலுமே தீண்ட முடியாத இன்னொரு ‘கொம்பையா பாண்டியனாக’ உருமாறும் வெற்றிப் பெருமிதத்துடன் படம் நிறைவதுதான் ஆபத்தான செய்தியாக இருக்கிறது.

இதிலுள்ள சாதிய ரீதியிலான ஆபத்துக்களைத் தவிர்த்துவிட்டு ஒரு வெகுஜனத் திரைப்படமாக இதைப் பார்க்கலாம் என்றாலும் அந்தச் சுவாரசியத்தையும் இது தராமல் போவதுதான் எரிச்சல் கலந்த சோகம்.

**

ஆனால் ஒரு விஷயத்துக்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

ஊரில் பெரிய மனிதர்களாக உலவும் பல நபர்களின் பழங்காலப் பின்னணியும் அது சார்ந்த வரலாறும் கேவலமாகத்தான் இருக்கிறது. பல்வேறு துரோகங்களின், அராஜகங்களின் மூலமாகத்தான் தங்களின் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு இன்றைக்குப் பெருமையாக உலவுகிறார்கள். பெரிய பெரிய மீசை வைத்த சண்டியர்கள் கூட சாய்க்க முடியாத அவர்களது கோட்டையை, ஓர் எளிய பெண் தன் உடலை ஆயுதமாகக் கொண்டு சாய்க்க முடிகிற அளவுக்கு அந்தக் கோட்டைகள் பலவீனமாக இருக்கின்றன என்கிற உண்மையைப் பதிவு செய்ததற்காக.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சாதியப் பெருமிதத்தைப் பதிவு செய்யும் வழக்கமான, ஆனால் சலிப்பூட்டும் அனுபவத்தைத் தந்த திரைப்படம்தான் கிடாரி.

‘கொம்பையாவுக்குப் பரிசு மரணமல்ல, மரணபயம்தான்’ என்றொரு வசனம் படத்தின் இறுதியில் வருகிறது.

ஆனால் உண்மையில் இந்த விஷயம் நிகழ்ந்தது பார்வையாளர்களுக்குத்தான். ‘மரண பயத்தைக் காட்டிடாண்டா பரமா’ என்று சசிகுமாரின் முந்தைய திரைப்பட வசனத்திலிருந்தே உதாரணம் சொல்ல முடிவதுதான் இதிலுள்ள முரண்நகை.

மூலக்கதை