மும்பை பங்குச் சந்தையில் 108 புள்ளிகள் அதிகரிப்பு

தினமணி  தினமணி

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 108 புள்ளிகள் அதிகரித்தது.

வர்த்தகத்தின் தொடக்கத்தில் பங்குச் சந்தைகளில் மந்த நிலை காணப்பட்டது. பின்னர் முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் வியாழக்கிழமை ஏற்பட்ட பெரும் சரிவிலிருந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீண்டன.

ஆகஸ்ட் மாதத்தில் மோட்டார் வாகன விற்பனை சிறப்பாக இருந்ததையடுத்து, அத்துறை சார்ந்த நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் அதிக தேவை காணப்பட்டது. மேலும், வங்கிப் பங்குகளும் முதலீட்டாளர்களிடம் வரவேற்பைப் பெற்றன.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் வெளியாவதையொட்டி சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஈடுபட்டனர்.

மோட்டார் வாகனத் துறை பங்குகளின் விலை சராசரியாக 1.01% அதிகரித்தது. உள்கட்டமைப்பு, வீட்டு வசதி, மருந்து, மின்சாரம், வங்கி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் சந்தைகளில் ஓரளவுக்கு வரவேற்பு காணப்பட்டது.

இருப்பினும், உலோகம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறை நிறுவனப் பங்குகளின் விலை சரிவைக் கண்டன.

அதானி போர்ட்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 3.55% உயர்ந்தது. அதேசமயம், கோல் இந்தியா நிறுவனப் பங்கின் விலை 1.64% வீழ்ச்சி கண்டது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 108 புள்ளிகள் அதிகரித்து 28,532 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச ஏற்றம் இதுவாகும்.

தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 8,809 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதிக்குப் பிறகு நிஃப்டி 8,800 புள்ளிகளைக் கடந்தது இதுவே முதல் முறையாகும்.

மூலக்கதை