நடிகர் அருண் விஜய் ஏற்படுத்திய கார் விபத்து: விசாரணை அதிகாரி ரயில்வே காவல் துறைக்கு மாற்றம்

தினமணி  தினமணி
நடிகர் அருண் விஜய் ஏற்படுத்திய கார் விபத்து: விசாரணை அதிகாரி ரயில்வே காவல் துறைக்கு மாற்றம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஏற்படுத்திய கார் விபத்து வழக்கின் விசாரணை அதிகாரி, ரயில்வே காவல்துறைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தமிழ்த் திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய், கடந்த சனிக்கிழமை அதிகாலை நுங்கம்பாக்கத்தில் இருந்து காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே வரும்போது, அங்கு நின்றுகொண்டிருந்த காவல்துறை வேன் மீது அருண் விஜய் கார் மோதியது.

அருண் விஜய் அதிக மதுபோதையில் காரை ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் சதீஷ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார்.

இந்த வழக்கில் அருண் விஜய் தலைமறைவாக இருந்து வருகிறார். இதற்கிடையே அருண் விஜய்யின் காரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் சதீஷை திடீரென ரயில்வே காவல்துறைக்கு மாற்றி டி.ஜி.பி. அசோக்குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

இதேபோல போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் ஜெகதீஷ் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணத்தை காவல்துறை அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர்.

இந்த நடவடிக்கை பெருநகர காவல்துறை அதிகாரிகளிடமும், போலீஸாரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மூலக்கதை